ARTICLE AD BOX
திருச்சி,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த வருண்குமாருக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. சமீபத்தில் வருண்குமார் டி.ஐ.ஜி.-யாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக டிஐஜி-யாக உள்ளார். இந்த சூழலில், ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் குறித்து அவதூறாக பேசியதாக வருண்குமார், சீமான் மீது திருச்சி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நான்காம் எண் கோர்ட்டில் தனி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதும் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலமும் அளித்தார். மேலும் அவரது சாட்சிகள் அளித்த வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 19-2-2025 அன்று நேரில் ஆஜர் ஆகுமாறு சீமானுக்கு கடந்த 7-1-2025 அன்று திருச்சி நான்காம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று இந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) பாலாஜி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சீமான் ஆஜராகவில்லை.
மனு தாரரான திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. வருண்குமார் ஆஜர் ஆனார். தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தும், அன்று சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் மாஜிஸ்திரேட்டு பாலாஜி உத்தரவிட்டார்.
கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்தபோது செய்தியாளர்கள் போலீஸ் டி.ஐ.ஜி. வருண்குமாரிடம், சீமானின் ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்களை பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பி வருகிறார்களே. அதற்கு தனியாக வழக்கு தொடருவீர்களா? என கேட்டனர்.
அதற்கு டி.ஐ.ஜி. வருண்குமார் `எனது வக்கீல் வழக்கு தொடர்பான எல்லா விவரங்களையும் கூறி விட்டார். இந்த 'மைக் புலிகேசி'க்கு (சீமான்) எல்லாம் ரியாக்ட் செய்ய நான் விரும்பவில்லை' என சிரித்துக்கொண்டே கூறினார்.
தொடர்ந்து டி.ஐ.ஜி. வருண்குமார் தரப்பு அரசு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் கூறுகையில், "திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இவ்வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கோர்ட்டு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதனை பெற்றுக்கொள்ளவில்லை. சீமான் ஆஜராகாத காரணத்தை கோர்ட்டு பெற்றுக்கொண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அவரை நேரடியாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் சீமான் ஆஜராகவில்லை என்றால் கோர்ட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும். பிடிவாரண்ட் கூட பிறப்பிக்க வாய்ப்புள்ளது" என்று அவர் தெரிவித்தார்.