ARTICLE AD BOX
தமிழகத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தற்போது பல இடங்களில் தொடங்கி விட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் பிறகே தொடங்கும் என்றாலும், சில தனியார் கல்லூரிகள் மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கான சேர்க்கை செயல்முறைகளை தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், மதுரையில் உள்ள தமிழகத்தின் டாப் இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒன்றான தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது என்பதை தெரிந்துக் கொள்வோம். இதுகுறித்த விபரங்கள் யு.கே.வி தமிழா என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தமிழகத்தின் பழம்பெரும் கல்லூரிகளில் ஒன்று. 1957ல் ஆரம்பிக்கப்பட்டது. இது அரசு உதவி பெறும் கல்லூரி. இதனால் குறைவான கல்விக் கட்டணத்தில் படிக்கலாம்.
இங்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கட்ரானிக்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் பிசின்ஸ் சிஸ்டம்ஸ், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ், இண்டீரியர் டிசைன், ஆர்க்கிடெக்சர், எம்.எஸ்.சி டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தியாகராஜர் கல்லூரியில் இரண்டு வழிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒன்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கவுன்சலிங், இரண்டு மேனேஜ்மெண்ட் கோட்டா. கல்லூரியில் உள்ள மொத்த இடங்களில் 65% இடங்கள் தமிழ்நாடு கவுன்சலிங் மூலம் நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 35% இடங்கள் மேனேஜ்மெண்ட் கோட்டா மூலம் நிரப்பப்படுகிறது.
இந்த மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்கள் மெரிட் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. அதாவது 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் மேனேஜ்மெண்ட் கோட்டாவுக்கான விண்ணப்பப் பதிவு, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான சில நாட்களில் தொடங்குகிறது. விண்ணப்பப் பதிவு முடிந்த உடன் இதற்காக கல்லூரியில் தனியாக ஒரு கவுன்சலிங் நடைபெறும்.