ARTICLE AD BOX
மேற்கு ஆப்பிரிக்காவில் எப்படி இவ்வளவு தங்கம் இருக்கு?.. ஆதிக்கம் செலுத்தும் கானா,மாலி..
சர்வதேச அளவில் தங்க பயன்பாட்டில் முன்னணி நாடுகளில் ஒன்றாக நாம் உள்ளோம். ஆனால் நம் நாட்டில் தங்க உற்பத்தி பெயரளவுக்கே உள்ளது. அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியாக கருதப்படும் மேற்கு ஆப்பிரிக்காவில் தங்க படிமங்கள் குவிந்து கிடக்கிறது. மேற்கு ஆப்பிரிக்கா பல நூற்றாண்டுகளாக புகழ்பெற்ற தங்க சுரங்க மையமாக இருந்து வருகிறது. பண்டைய கானா பேரரசு காலத்திலிருந்தே இது உள்ளது. அதன் ஏராளமான தங்க படிமங்கள் மற்றும் செழிப்பான வர்த்தக வலையமைப்புகள் காரணமாக மேற்கு ஆப்பிரிக்கா பகுதி தங்க நிலம் என்று பெயர் பெற்றுள்ளது.
சர்வதேச அளவில் தங்க உற்பத்தியில் மேற்கு ஆப்பிரிக்கா முன்னணியில் உள்ளது. 2024 நிலவரப்படி, உலகின் மொத்த தங்க உற்பத்தியில் மேற்கு ஆப்பிரிக்கா தோரயமாக 10.8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. 202 கோடி முதல் 208 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எபர்னியன் ஓரோஜெனி எனப்படும் ஒரு பெரிய டெக்டோனிக் நிகழ்வின்போது, மேற்கு ஆப்பிரக்காவின் கிரட்டன் பாறைகளுக்குள் தங்க படிமங்கள் உருவாகின. மேற்கு ஆப்பிரிக்காவில் மேற்கு ஆப்பிரிக்க கிரட்டனில் பெரும்பாலான தங்க உற்பத்தி மற்றும் படிமங்கள் காணப்படுகின்றன.

மேற்கு ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில், மாலி,கானா,புர்கினா பாசோ, கோட் டி ஐவோயர்,கினியா, செனகல் மற்றும் மவுரித்தேனியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய கிரட்டன் உள்ளது. கானா மற்றும் மாலியில் உள்ள தங்கம் படிம பகுதிகள் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் வளமானவை. கானா மற்றும் மாலி தற்போது, ஒட்டுமொத்தமாக மேற்கு ஆப்பிரிக்க துணை பகுதியின் ஒருங்கிணைந்த கடந்த கால உற்பத்தி மற்றும் வளங்களில் 57 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன.
கானா 1,000 டன் தங்க படிமம் உள்ளதாக கருதப்படுகிறது. கானா ஒவ்வொரு ஆண்டும் 90 டன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. இது உலக உற்பத்தியில் 7 சதவீதமாகும். மாலியில் கடந்த 2023ல் தங்க உற்பத்தி 67.7 டன்களை எட்டியது. அந்நாட்டில் 800 டன் தங்க டெபாசிட் உள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சீனாவும் ஆஸ்திரேலியாவும் சர்வதேச அளவில் இரண்டு பெரிய தங்க உற்பத்தியாளர்கள் உள்ளனர். 2023ல் சீனா 370 டன் தங்கத்தை வெட்டி எடுத்தது. அந்த ஆண்டில் ஆஸ்திரேலியா 310 டன் தங்கத்தை உற்பத்தி செய்துள்ளது.பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Story written by: Subramanian