ARTICLE AD BOX
மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகுவதே ஒருகலை. படித்தவர், படிக்காதவர் எல்லாருமே இந்தப் பண்பை கைக்கொள்ள முடியும். இது ஒரு செலவில்லாத நாகரிகம் மரியாதை காட்டுவது என்றால், எடுத்ததற்கெல்லாம் 'ஆமாம்' போடுவது என்று அர்த்தமல்ல. அதுபோல் எப்போதுமே எதிராளிக்கு திருப்தி அளிக்கிறவிதமாய் நடந்து கொண்டாக வேண்டும் என்றும் அர்த்தமல்ல.
ஒருவரின் கோரிக்கையை, அது 'மறுக்கப்படுகிறது' என்று அறியாத விதமாகவே, நீங்கள் நாசுக்கான வார்த்தைகளில் உங்கள் கருத்தை தெரிவித்து விடமுடியும். எந்த மனத்தாங்கலும் இல்லாமல் அதை அவர் ஏற்றுக் கொண்டுவிட உதவுவது அந்த மரியாதைதான். 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்பார்கள். ஒருவனின் குணத்தைப் பொறுத்துத்தான் நடத்தை.
அவனது நடத்தைக்கேற்ப நல்லதும் கெட்டதும் அவனை வந்தடைகின்றன. நாணயம். உண்மை, பொறுப்பு, உழைப்பு போன்ற நல்லியல்புகள்தாம் ஒருவனது குணாதிசயத்தை உயர்த்துகின்றன. மன்னிக்கும் மாண்பு, தோழமை, நல்லெண்ணம் போன்ற விரும்பத்தக்க குணங்கள் கொண்டவனை பகைவர்களும் நேசிப்பார்கள்.
வாழ்க்கையின் தொடக்க காலத்தில் இருந்தே நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால்தான் நல்ல குணவானாக உருவாக முடியும். சமுதாயத்தில் குணத்தைப் பொறுத்தே 'இவன் இப்படி' என்கிற முத்திரை வருகிறது. சில நல்லியல்புகளின் சேர்க்கைதான் 'குணநலன்' என்று ஒட்டுமொத்தமாக அறியப்படுகிறது.
சமூகத்தில் தனக்கென்று ஓர் இடத்தைச் சம்பாதித்துக்கொள்ள நேர்மை அவசியம். தனிப்பட்ட நபராயினும் சரி, நிறுவனமாயினும் சரிநேர்மையின் வழியேதான் தற்பெயரை ஈட்ட முடியும். நேர்மை கொண்டவர்கள் எதற்கும் அஞ்சவேண்டிய அவசியம் இருக்காது
நேர்மை உள்ளவர் ஒருபக்கம் மேன்னையானவராகவும், மறுபக்கம் வலிமை உடையவராகவும் காணப்படுவார். முறையற்ற வழிகளில் பனம் சேர்ப்பதை விரும்பமாட்டார். இது அவருடைய மேன்மையான சுபாவத்தைக் காட்டுவது. அதே நேரத்தில், அவர் தன்னுடைய பாதையில் விலகமாட்டார்.
அவருடைய வலிமையும், தைரியமும் அப்போதுதான் வெளிப்படுகிறது. எத்தனையோ தேவைகள் இருந்தாலும் வறுமையில் உழன்றாலும் நேர்மை உள்ளவரின் வாழ்க்கை நிம்மதியும், மகிழ்ச்சியும் கொண்டதாகவே இருக்கிறது. மட்டற்ற வலிமை இருப்பதனால்தானே அவரால் வேதனைகளையும், சோதனைகளையும் தாங்கிக்கொள்ள முடிகிறது.
'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - சங்கு சுட்டாலும் வெண்மைதரும்' என்ற ஆன்றோரின் வாக்கே வாக்கு.
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்று நமது நாட்டில் ஒரு பழமொழி உண்டு. நேர்மையும், வாய்மையும் கொண்டவனை எல்லோருமே மதிப்பார்கள். அவனிடம், தன்னம்பிக்கை, சமநிலை. இசைவான பேச்சு, செயல் எல்லாம் குடிகொண்டிருக்கும். அவனுடைய எளிமையும், மரியாதை கலந்த போக்கும் அவனை எவ்வித தளைகளுக்கும் கட்டுப்படாத சுதந்திர மனிதனாய் வாழச் செய்கிறது. இப்படி மகிழ்ச்சியுடன் முழு சுதந்திர மனிதனாய் வாழத்தானே நாம் இந்த பூமியில் பிறந்துள்ளோம்.