ARTICLE AD BOX
மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிலைப்படுத்தாமல் காலங்கடத்தி வருவது தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது மேட்டூர் அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிலைப்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப்பொறுப்பை ஏற்று 4 ஆண்டுகளாகியும் இதுவரை அதனை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவது நம்பி வாக்களித்த தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
ஆசிரியர் பணி நிரந்தரம், செவிலியர் பணி நிரந்தரம், மருத்துவர் பணி நிரந்தரம், மின்வாரிய ஊழியர்கள் பணி நிரந்தரம், குடிநீர் வாரிய ஊழியர்கள் பணி நிரந்தரம், டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், மக்கள் நலப்பணியாளர்கள் பணி நிரந்தரம், ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊராட்சி ஒன்றிய கணிணி உதவியாளர்கள் பணி நிரந்தரம், கல்லூரி விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம், தூய்மைப்பொறியாளர்கள் பணி நிரந்தரம், மேட்டூர் அனல் மின்நிலைய ஊழியர்கள் பணி நிரந்தரம் என்று திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவிற்கு தமிழ்நாடு ஒவ்வொரு நாளும் போராட்டக் களமாக மாறிநிற்கிறது.
தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடைபெறுவது போலவும், மக்கள் முகங்களில் மகிழ்ச்சி பொங்குவது போலவும் திமுக அரசு கூறுவது அனைத்தும் பச்சைப்பொய் என்பதற்கு நாள்தோறும் நடைபெறும் தொழிலாளர் போராட்டங்களே சான்றாகும். கண்ணீரோடு் வீதியில் இறங்கிப் போராடும் தொழிலாளர்களின் அவலக்குரல் திமுக ஆட்சியாளர்களுக்குக் கேட்காதாது ஏன்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
ஆகவே, கடந்த 5 நாட்களுக்கும் மேலாகப் போராடிவரும் மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப்
பணி நிலைப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.” என்று சீமானின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.