ARTICLE AD BOX
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 233 தொகுதிகளில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதில், தனிப்பெரும்பான்மையாக பாஜக மட்டும் 132 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த வெற்றிக்கு, 2024 ஆம் ஆண்டு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் 21 முதல் 60 வயது வரையிலிருக்கும் தகுதியான பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்ததுதான் முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது.
2024 ஜூலை மாதம் முதல் இத்திட்டம் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக அப்போதே ரூ.46 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்தல் சமயத்தில் இந்த உதவித்தொகை ரூ.2100 ஆக உயர்த்தப்படும் என்றும் பாஜக அரசாங்கம் அறிவித்திருந்தது. முதலைமைச்சராகப் பொறுப்பேற்றபின் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும்கூட, “லட்கி பெஹ்ன் யோஜனா திட்டம் தொடரும்; அது ரூ.2100 ஆக உயர்த்தி வழங்கப்படும்” என்றே முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில், மாதந்தோறும் வழங்கப்படுமென்று உறுதியளிக்கப்பட்ட ரூ.1500 சிலருக்கு கடந்த இரு மாதங்களாக வழங்கப்படவில்லை என்றும் சிலருக்கு கடந்த மாதம் மட்டும் வழங்கப்படவில்லை குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதை மறுத்த பல பெண்கள், தங்களுக்குப் பணம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர். கடந்த மாதம் பணம் செலுத்தப்படாததை எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் இதுதொடர்பாக பதில் அளித்திருந்த முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “லட்கி பெஹ்ன் யோஜனா உட்பட எந்த ஒரு திட்டத்தினையும் தனது அரசாங்கம் நிறுத்தாது” என உறுதியளித்திருந்தார்.
‘லட்கி பெஹ்ன்’ திட்டம் தொடர்பாக கட்டுரையை வெளியிட்டுள்ள ஸ்க்ரால் செய்தி நிறுவனம், “சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு, திட்டத்தில் விண்ணப்பித்த ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதந்தோறும் ரூ.1500 தொகையை அரசாங்கம் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தியது. கடந்த ஜனவரி மாதத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையையும் தகுதியையும் ஆய்வு செய்து, பயனாளிகளின் எண்ணிக்கையை 2.46 கோடியில் இருந்து 2.41 கோடியாகக் குறைத்துள்ளது” தெரிவித்துள்ளது. திட்டத்திலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு இதுதொடர்பான தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் பெற்ற வெற்றிக்குப் பின், லட்கி பெஹ்ன் யோஜனா திட்டத்தில் பயன்பெறும் பெண்களின் தகுதியை கடுமையாக சரிபார்க்க மஹாயுதி அரசாங்கம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் செய்திகள் வந்தன. விதிகள் கடுமையாக்கப்பட்டதன் காரணமாக இதுவரை 8 முதல் 9 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், இது மேலும் அதிகரிக்கலாம் என்றும் ‘பத்ரிகா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமின்றி லட்கி பெஹ்ன் யோஜனா திட்டத்தில் பணம் பெற, ‘தகுதியற்ற’ பெண்கள் இதுவரை பெற்ற பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தகுதியற்ற பெண்களுக்கு வழங்கப்பட்ட பணம் திரும்பப் பெறப்படாது என்றும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படி முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வந்துகொண்டிருப்பதால், அரசு இது குறித்து தெளிவான விளக்கம் ஒன்றினை விரைவில் அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அதிதி தட்கரே, “நிலுவையில் உள்ள பிப்ரவரி மாதத்தொகை மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்படும். மார்ச் மாதத்திற்கான தொகை பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தபின் மார்ச் 26 ஆம் தேதி வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். ரூ.1500ல் இருந்து ரூ.2100 ஆக உயர்த்தப்படுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட நிலையில், அதுகுறித்து முதலமைச்சரும் துணை முதலமைச்சர்களும் முடிவெடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். பல பெண்களை இத்திட்டத்திலிருந்து விடுவித்தது தொடர்பான குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர், “கடந்த மாதம் இந்தத் திட்டத்தின் மூலம் 2.5 கோடி பெண்களை நாங்கள் சென்றடைந்துள்ளோம். இந்தத் திட்டத்தின் வெற்றியால் எதிர்க்கட்சிகள் மனசோர்வடைந்துள்ளன. அதன்காரணமாக, இப்பிரச்னைகளை அவர்கள் எழுப்புகின்றனர்” எனத் தெரிவித்தார்.
ஜூலை 2024 முதல் ஜனவரி 2025 வரை மொத்தம் ஏழு தவணைகளில் ரூ.10,500 வரை மகராஷ்டிர பெண்கள் பெற்றுள்ளனர். இதில், தகுதியற்ற பெண்களை திட்டத்திலிருந்து நீக்கியபின் ரூ.1500ஐ ரூ.2100 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மார்ச் 10 ஆம் தேதி அம்மாநில நிதியமைச்சர் அஜித்பவார் பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பின்பே இதுகுறித்து உறுதிபட தெரிவிக்கமுடியும் என்றும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.