ARTICLE AD BOX
முதியோர் இல்லம் என்பது வயதானவர்களுக்கான சிறைச்சாலை போல் சித்தரிக்கப்பட்டு வந்தது. பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை அங்கு விட்டால் கேவலமாக எண்ணியதுண்டு. ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பலர் முதியோர் இல்லங்களிலும், ரிட்டயர்மென்ட் ஹோம்களிலும் வசித்து வருகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணமாக கருதப்படுவது, இன்றைய இளைஞர்கள் ஒன்பதிலிருந்து ஐந்து மணிவரை உள்ள வேலைகளில் இருப்பதில்லை. இரவு பகல் பாராது, ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் ஓடி உழைத்து வருகிறார்கள்.
இன்றைய முதியவர்களும் கட்டுப்பாடின்றி சுதந்திரமாக இருக்க விரும்புகின்றனர். பிள்ளைகளை சார்ந்து இருக்க விரும்புவதில்லை. பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை ஓடி ஓடி உழைத்த முதியவர்கள் இப்பொழுது சுதந்திரமாக இருக்க விரும்புகிறார்கள்.
முன்பு பார்த்து பார்த்து செலவு செய்தவர்கள், ஓய்வூதியம் நல்ல நிலையில் கிடைக்கும்பொழுது அதனை நன்கு செலவழிக்கவும், வசதியாக வாழவும், இளம் வயதில் அனுபவிக்காமல் விட்ட விஷயங்களில் ஆர்வம் காட்டவும், நான்கு இடங்களை சுற்றி பார்க்கவும், நான்கு மனிதர்களுடன் பேசிப்பழகவும் விரும்புகின்றனர்.
இன்றைய காலத்தில் தனக்கு மிஞ்சிதான் எவருக்கும் என்ற மனப்பான்மை இளைஞர்கள் முதல் முதியவர்கள்வரை பெருகிக் கொண்டிருப்பதால் அவர்கள் சம்பாதித்ததை சேமித்து வைப்பதும், நன்றாக செலவு செய்தும் வருகிறார்கள். இது சரியா தவறா என்ற விவாதம் தேவையற்றது.
எப்படி இளைஞர்கள் அவர்களுடைய விருப்பம்போல் வாழ எண்ணுகிறார்களோ, அதுபோல் முதியவர்களும் இந்த வயதிலாவது எதையும் இழக்க விரும்பாமல் இருப்பதும்தான் உண்மை. பிள்ளைகளின் சுதந்திரத்தில் தலையிட விரும்பாததுடன் அவர்களின் சந்தோஷத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
பிள்ளைகள் வேலை நிமித்தமாக வெளியூர்களிலோ, வெளிநாடுகளிலோ இருக்க நேரிடும்போது பெற்றவர்கள் நல்ல இடத்தில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இப்படி இருவரின் நலனுக்காகவும் ரிட்டயர்மென்ட் ஹோம்ஸ்களை தேர்வு செய்கின்றனர். இதனால் பிள்ளைகளும் நிம்மதியாக வேலை பார்க்க முடிகிறது பெற்றவர்களும் அவர்கள் வயதை ஒத்தவர்களுடன் பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் ஆனந்தமாக பொழுதை கழிக்க முடிகிறது.
இப்பொழுதுள்ள ஹோம்கள் வயதானவர்களை நன்கு கவனிப்பதுடன் நான்கு இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருகிறார்கள். இதனால் இவர்கள் தனிமையை உணர்வதில்லை. நான்கு பேருடன் பேசுவதும், பிடித்ததை செய்வதும், முதுமையை தொந்தரவாக எண்ணாமல் மகிழ்ச்சியுடன் கழிக்கவும் ஏற்ற இடமாக உள்ளது.
வயதானவர்களுக்கு எந்த ஆசையும் இருக்கக்கூடாதா என்ன? அவர்கள் வயதை ஒத்தவர்களுடன் பேசுவதும், பழகுவதும் மனதிற்கு சந்தோஷத்தை தருவது நல்லதுதானே. எப்பொழுதும் குடும்பம் குடும்பம் என்று ஓடிக்கொண்டிருந்தவர்கள் ஓய்விற்குப் பிறகாவது அவர்களின் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க உதவலாமே!
சொந்தங்கள் என்ன சொல்வார்களோ அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்களோ என்று மற்றவர்களின் விமர்சனத்தைப் பற்றி கவலைப்படாமல் அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்தான் என்பதை புரிந்துகொண்டு பெற்றவர்களுக்கு பிடித்திருந்தால் நல்ல வசதியான ஹோம்களில் விடுவதில் தவறொன்றும் இல்லை. இதில் பெற்றார் மற்றும் பிள்ளைகளுக்கு இடையே நல்ல புரிதல் மட்டும் இருந்தால் போதும்.
ஒவ்வொருவரும் முதுமையை சந்திப்பது வாழ்க்கையின் யதார்த்தம். முதுமை என்பது பல்வேறுபட்ட வளர்ச்சி நிலைகளில் ஒன்று. ஒவ்வொன்றிற்கும் பலமும் உண்டு பலவீனங்களும் உண்டு. உளவியல் ரீதியாக பார்த்தால் வயது என்பது நம் மனதை பொறுத்தது என்று கூறுகிறார்கள். முதுமை காலத்தில் சிலர் மிகப்பெரிய தலைமைப் பொறுப்புகளை ஏற்று மிக சிறப்பாக இளமை துடிப்புடன் இருப்பதை பார்க்கிறோம்.
இலட்சியத் தெளிவும், செயல் துடிப்பும் இருந்தால்போதும் வயது ஒரு தடையே அல்ல. அனுபவ அறிவு பெற்ற முதியோர்களின் அறிவுரைகள் இன்றைய இளைஞர் களுக்கு மிகவும் தேவை. எனவே முதுமையை போற்றுவோம். அதே சமயம் அவர்களை சுதந்திரமாக அவர்களின் விருப்பப்படி இருக்கவும், எஞ்சிய வாழ்வை கொண்டாடவும் இடைஞ்சல் செய்யாமல் இருப்போம்!
என்ன நான் சொல்வது சரிதானே!