ARTICLE AD BOX
முதன்முறையாக மெட்ராஸ் ஐஐடி-யில் விளையாட்டு பிரிவில் 5 மாணவர்களுக்கு அட்மிஷன்..!
சென்னையில் இயங்கி வரக்கூடிய ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனம் வரலாற்றிலேயே முதன்முறையாக விளையாட்டு பிரிவில் 5 மாணவர்களுக்கு அட்மிஷன் தந்துள்ளது. மெட்ராஸ் ஐஐடி நிறுவனம் சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கான தனி மாணவர் சேர்க்கை பிரிவை ('Sports Excellence Admission' (SEA)) உருவாக்கி இருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவிலேயே விளையாட்டுப் பிரிவில் மாணவர் சேர்க்கை பிரிவை அறிமுகப்படுத்தும் முதல் ஐஐடி என்ற பெருமை மெட்ராஸ் ஐஐடிக்கு கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டில் "விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர் சேர்க்கை" பிரிவின் கீழ் தேசிய அளவில் சாதனை படைத்த ஐந்து தடகள வீரர் வீராங்கனைகளுக்கு ஐஐடியில் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இந்த https://jeeadv.iitm.ac.in/sea/information.html பிரத்யேக இணையதளத்தில் மாணவர்கள் ஸ்போர்ட்ஸ் பிரிவில் அட்மிஷன் பெறுவதற்கான தகுதி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தின் படி இந்தியாவை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு இளங்கலை பட்டப்படிப்பு பாடத்திலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்படும். இதில் ஒரு இடம் மாணவிகளுக்கு மட்டும் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களுடைய விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் அதே வேளையில் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் உயர் கல்வியை தொடரவும் இந்த திட்டம் ஊக்குவிக்கிறது என மெட்ராஸ் ஐஐடியின் இயக்குனர் பேராசிரியர் காமகோடி தெரிவித்துள்ளார். விளையாட்டுக்கான சிறப்பு மாணவர் சேர்க்கை பிரிவை உருவாக்கியது "குழந்தைகள் விளையாட ஊக்குவிக்க வேண்டும்" என்ற செய்தியை அனைவருக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி கூறியுள்ளார்.
இதன்படி 2024-25 ஆம் கல்வியாண்டில் மகாராஷ்டிராவை சேர்ந்த கைப்பந்து வீராங்கனை அரோகி பாவே, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த வாட்டர் போலோ நீச்சல் வீரர் ஆரியமான் மண்டல், டெல்லியை சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை நந்தினி ஜெயின், டெல்லியை சேர்ந்த டேபிள டென்னிஸ் வீரர் பிரபாவ் குப்தா, ஆந்திராவை சேர்ந்த டென்னிஸ் வீரர் வேதவச்சன் ரெட்டி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ஐஐடியின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். தகுதி வாய்ந்த வீரர்களுக்கு இந்தியாவின் உயர் கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு வழங்குவது சிறப்பானது என ஒரு பயனர் கூறியுள்ளார். ஒரு பயனர் இதன் மூலம் விளையாட்டும் முக்கியம் என்ற கருத்து அனைவரையும் சென்று சேரும் என ஒரு பயனர் பதிவு செய்துள்ளார்.
அதே வேளையில் ஒரு பயனர் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் கல்வியில் சிறந்து விளங்கும் நபர்களுக்கானது அதில் விளையாட்டு பிரிவை அறிமுகம் செய்து விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை கொண்டு வந்து வைப்பது சரியாக இருக்குமா? என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Story written by: Devika