ARTICLE AD BOX
சென்னை,
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி சிறை பிடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகளும் பறிமுதலுக்கு உள்ளாகிறது. இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்கும், சிறைபிடிக்கும் சம்பவத்திற்கும் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக இலங்கை அரசை மத்திய அரசு கண்டிக்கவும் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு காணவும், இலங்கை கடற்படையினரை கண்டித்தும், மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மீனவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கடலூரில் நடக்க இருக்கிறது.
மிகப்பெரிய அளவில் மீனவர்களை திரட்டி அவர்களுடன் விஜய் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறார். அடுத்த வாரத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக முறையாக போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட உள்ளது. மீனவர்களுடன் விஜய் இணைந்து நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைக்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் அமைக்கப்பட உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் விஜய்யுடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.