ARTICLE AD BOX
தருமபுரி கிழக்கு தி.மு.க. மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் பதவியிலிருந்து தர்மசெல்வன் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 23ஆம் தேதியன்று இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், பதவிக்கு வந்த கையோடு நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டினார். அதில், எல்லாமே இனிதான்தான் என்றும் தன்னை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்றும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரையும் தான் நினைத்தால் இடமாற்றம் செய்யமுடியும் என்றும் அவர் அதில் கூறியிருந்தார்.
ஆளும் கட்சிக்கு இந்தக் காணொலியால் கடும் நெருக்கடி ஏற்பட்டபோதும், அப்போதைக்கு அவர் மீது உடனடி நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. முன்னதாக, பழைய மா.செ. தடங்கம் சுப்பிரமணி சரியில்லை எனப் பிரச்சினை வந்ததால்தான் இவரைப் பொறுப்பாளராக நியமித்தார்கள். இவரும் சர்ச்சைக்கு உள்ளானதும் தலைமைக்கு சங்கடம் உண்டானது.
இந்த நிலையில், இன்று தர்மசெல்வனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி, அவருக்குப் பதிலாக மக்களவை உறுப்பினர் ஆ.மணியை தி.மு.க. தலைமை நியமித்துள்ளது. கடந்த தேர்தலில் பா.ம.க.வின் சௌமியா அன்புமணியைத் தோற்கடித்ததன் மூலம் இவர் அதிகமான கவனத்தை ஈர்த்தவர்.
வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சௌமியா போட்டியிட வாய்ப்பு உள்ளது எனும் நிலையில், மாவட்டத்தில் தி.மு.க.வின் பலத்தைத் தக்கவைக்க அக்கட்சியின் தலைமை மும்முரமாக இறங்கியுள்ளது.