ARTICLE AD BOX
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய போறீங்களா?.. அப்பம் இத முதல்ல தெரிஞ்சுக்கோங்க!..
பொதுமக்கள் தற்போது பரஸ்பர நிதி நிறுவனங்கள் (மியூச்சுவல் பண்ட்) வாயிலாக முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. வங்கி டெபாசிட்டை காட்டிலும் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்பதால் ஆர்வமுடன் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து வருகின்றனர். மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நம்மிடம் இருந்து பெறும் பணத்தை கொண்டு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். நம் முதலீட்டுக்கு தக்கவாறு நமக்கு யூனிட்டுகளாக தருவார்கள். பண்ட் திட்டங்களை பொறுத்து ஒவ்வொரு யூனிட் மதிப்பும் மாறுபடும். நிகர சொத்து மதிப்பு (என்ஏவி) மூலம் ஒரு பண்ட் திட்டத்தின் யூனிட் விலையை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
நிகர சொத்து மதிப்பு (என்ஏவி)
என்ஏவி என்பது ஒரு மியூச்சுவல் பண்ட் திட்டத்தின் யூனிட் விலையாகும். மேலும், ஒரு பண்டின் முதலீட்டின் சந்தை மதிப்பை பிரதிபலிக்கிறது. இது சிறந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பண்டின் மொத்த சொத்துக்களிலிருந்து மொத்த பொறுப்புகளை கழித்து பின்னர் அதனை நிலுவையில் உள்ள மொத்த யூனிட்களால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.
நிகர சொத்து மதிப்பு = (மொத்த சொத்துக்கள்-மொத்த பொறுப்புகள்) / நிலுவையில் உள்ள மொத்த யூனிட்கள்

என்ஏவி கணக்கிடுதல்
பொதுவாக மியூச்சுவல் பண்டுகளுக்கு தினசரி அடிப்படையில் என்ஏவி கணக்கிடப்படுகிறது. இது ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் பண்டின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. பரிவர்த்தனைக்கான கட் ஆஃப் பாயிண்ட் செபியால் நிர்ணயிக்கப்படுகிறது. கட் ஆஃப் பாயிண்ட்டுக்கு முன் ஆர்டர் வைக்கப்பட்டால், முதலீட்டாளர்களுக்கு அந்த நாளின் என்ஏவி வழங்கப்படும்.
என்ஏவி-ன் நன்மைகள்
1. மியூச்சுவல் பண்ட் யூனிட்டை வாங்கும் அல்லது விற்கும் விலையை என்ஏவி நிர்ணயம் செய்கிறது. எனவே முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும்போது என்ஏவி பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கிம்.
2. காலப்போக்கில் என்ஏவியில் ஏற்படும் மாற்றத்தை அளவிட்டால், ஒரு பண்ட் இதற்கு முன் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டது என்பதை கண்டறிய முதலீட்டாளர்களுக்கு உதவும்.
3. முதலீட்டாளர்கள் தாங்கள் பரஸ்பர நிதியில் வைத்திருக்கும் யூனிட்களின் மதிப்பை மதிப்பிடவும், தங்களின் பொருளாதார நிலையை தெளிவாக தெரிந்து கொள்ள உதவுகிறது.
4. என்ஏவி அதிகமாக இருந்தால், அந்த பண்ட் ஒருபோதும் உண்மையாக இருக்க முடியாது. அதற்கு பதிலாக பண்டுகளை ஒப்பிடும்போது, வளர்ச்சி விகிதம் மற்றும் பொதுவான செயல்திறன் ஆகியவை மிக முக்கியமான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
Story written by: Devika