ARTICLE AD BOX
மகா சிவராத்திரி, அய்யா வைகுண்டசாமி அவதார தினம், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி கொடை விழா ஆகியவற்றை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே சொல்ல முடியாத அளவுக்கு குஷிதான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவா வேண்டும். பருவமழை காலத்தில் காலையில் எழுந்ததும் டிவி முன்னாடி அமர்ந்து நமது மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கிறாரார்களாக என்ற எதிர்பார்ப்புடன் மாணவர்கள் அமர்ந்திருப்பர்.

அந்த வகையில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் போதும் போதும் என்ற அளவுக்கு விடுமுறைகள் கொட்டி கிடந்தது. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மகா சிவராத்திரி விழா வருகிற 26ம் தேதி நடைபெறுகிறது. இதேபோல் அடுத்த மாதம் மார்ச் 4ம் தேதி அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா மற்றும் 11ம் தேதி மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசி கொடை விழா நடைபெறுகிறது.

இதையொட்டி வருகிற 26ம் தேதியும், அடுத்த மாதம் 4ம் தேதி மற்றும் 11ம் தேதியும் குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

26ம் தேதி அளிக்கப்பட்டுள்ள மகா சிவராத்திரி விழாவுக்கான விடுமுறை ஈடு செய்யும் விதமாக மார்ச் மாதம் 8ம் தேதி சனிக்கிழமையும், அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழாவுக்காக அடுத்த மாதம் 4ம் தேதி அளிக்கப்பட்டுள்ள விடுமுறை ஈடு செய்யும் விதமாக மார்ச் 22ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழாவுக்காக அடுத்த மாதம் 11ம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக ஏப்ரல் மாதம் 12ம் தேதி சனிக்கிழமை அன்று குமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை நாட்களில் குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.