ARTICLE AD BOX
ஹாலிவுட் பாணியில், தமிழின் முதல் ஃபவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் படமாக உருவாக்கப்பட்டுள்ள ‘மர்மர்’ என்ற படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார். இவர் ஒரு பிசியோதெரபி டாக்டர். ஒரு இடத்தில் நடந்த சம்பவங்கள் பதிவான கேமராவிலுள்ள காட்சிகளை ஒரு ஆவணப்படமாக எடிட் செய்து வெளியிடப்படும் படம்தான், ஃபவுண்ட் ஃபுட்டேஜ். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பம் முதல் முடிவு வரை வீடியோ கேமராவின் விஷூவலிலேயே கதை நகர்கிறது. 2 ஆண்கள், 2 பெண்கள் கொண்ட யூடியூப் சேனல் குழுவினர், ஜவ்வாது மலையிலுள்ள காத்தூர் கிராமத்தின் அமானுஷ்ய சம்பவங்களைக் கேட்டு, அதை வீடியோ டாக்குமெண்ட்ரியாகப் பதிவு செய்ய அங்கு செல்கின்றனர். காத்தூர் கிராமத்தில் மக்களை பலி கேட்கும் மங்கை என்ற பெண்ணின் ஆவி, முழு பவுர்ணமி அன்று ஆற்றில் குளிக்கும் 7 சப்த கன்னியர்கள் என்பதாக, அந்தக் கிராமத்தில் நிகழும் 2 அமானுஷ்ய விஷயங்கள் உண்மையா? அல்லது புனையப்பட்ட கதையா என்று ஆராய்கின்றனர்.
மெல்வின் (தேவராஜ் ஆறுமுகம்), ரிஷி (ரிச்சி கபூர்), அங்கீதா (சுகன்யா சண்முகம்), ஜெனிபர் (அரியா செல்வராஜ்) ஆகியோருக்கு உதவி செய்ய, காந்தா (யுவிகா) என்ற இளம்பெண் முன்வருகிறார். இரவில் அவர்களின் பயணம் அடர்ந்த காட்டின் வழியே தொடர்கிறது. ஊர் மக்களின் எச்சரிக்கையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. பிறகு ஆவிகளுடன் பேசும் ஓய்ஜா போர்டை வைத்து விளையாட, அப்போது யாரும் எதிர்பாராத அமானுஷ்ய ஆட்டம் ஆரம்பமாகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
புதிய முயற்சியில் ஈடுபட்ட இயக்குனருக்கு பாராட்டுகள். நிஜ இருட்டில் படப்பிடிப்பு நடத்தி, ஆடியன்ஸின் இதயத்துடிப்பை ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ் எகிறச் செய்துள்ளார். பின்னணி இசை இல்லை. இயற்கை ஒலியையே கேவ்ய்ன் பிரெடெரிக் வடிவமைத்திருப்பது இரட்டிப்பு பயத்தை ஏற்படுத்துகிறது. எடிட்டர் ரோஹித் பணி சிறப்பானது. படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க வேண்டும். புதுமையை விரும்பும் ரசிகர்கள் பார்க்கலாம்.