ARTICLE AD BOX
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கடனோடு பிறப்பதாக தி.மு.க. தனது 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 44 மாதங்கள் கடந்துள்ள நிலையில், பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இரண்டே கால் லட்சம் ரூபாய் கடனோடு பிறக்கும் அளவுக்கு கடனை அதிகரித்துள்ள அரசு தி.மு.க. அரசு. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை அனைத்தும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
ஆசிரியர் நியமனம், மருத்துவர்கள் நியமனம், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியிடங்களை நிரப்புதல், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல், அகவிலைப்படி அளித்தல் என எதைக் கேட்டாலும் நிதி இல்லை, நிதி இல்லை என்று சொல்லி காலந்தாழ்த்தும் தி.மு.க. அரசு, தற்போது மருத்துவ மாணவர்களின் வைப்புத் தொகை திருப்பி அளிக்கப்படுவதை தாமதப்படுத்தி வருகிறது.
2024-2025ம் ஆண்டிற்கான மருத்துவச் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிந்துவிட்டது. மாணவர் சேர்க்கை கவுன்சிலில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பத்துடன் 30,000 ரூபாய் வைப்புத் தொகையும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வைப்புத் தொகையும் செலுத்தியுள்ளதாகவும், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிந்தும் நிரம்பாத இடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் ஐந்து லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கட்டியதாகவும், வழக்கமாக கவுன்சிலிங் முடிந்து ஓரிரு மாதங்களில் தொடர்புடையவர்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும், ஆனால் இந்த ஆண்டு ஐந்தாறு மாதங்களாகியும் வைப்புத் தொகை திருப்பித் தரப்படவில்லை என்றும், இந்தத் தொகையை கல்லூரிக் கட்டணத்தில் கழித்துக் கொள்ளவும் நிர்வாகம் மறுக்கிறது என்றும் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்தில் கேட்டால், நிதிப் பற்றாக்குறை காரணமாக வைப்புத் தொகையை திருப்பி அளிக்க முடியவில்லை என்றும், விரைவில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. தனியார் கல்லூரிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசாங்கமே, வைப்புத் தொகையை திருப்பித் தர தாமதிப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிகளை உயர்த்திவிட்டு, நிதி இல்லை என்று சொல்வது வெட்கக்கேடானது. இது, தி.மு.க. அரசின் நிதி சீர்கேட்டிற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, வைப்புத் தொகையை மாணவர்களின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.