ARTICLE AD BOX
மரபணு மாற்றப்பட்ட கடுகின் களப் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ‘டி.எம்.ஹெச்-11’ என்ற கடுகை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனை செய்ய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (ஜிஇஏசி) அனுமதி அளித்தது.
இந்த அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு, கடந்த 2022-ஆம் ஆண்டு மாறுபட்ட தீா்ப்பை அளித்தது.
‘மரபணு மாற்றப்பட்ட கடுகு மனிதா்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமா என்ற கண்ணோட்டத்தில் ஆராயப்படவில்லை. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் அமைத்த தொழில்நுட்ப நிபுணா் குழுவின் பரிந்துரைகளை ஜிஇஏசி முற்றிலும் புறக்கணித்துள்ளது. எனவே, மரபணு மாற்றப்பட்ட கடுகை களப் பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது தவறானதாகும். ஜிஇஏசி-யின் முடிவு பொது நம்பிக்கை கொள்கையை மீறுவதாக உள்ளது’ என்று பி.வி.நாகரத்னா தீா்ப்பளித்தாா்.
அதே நேரம், ‘இது அரசின் கொள்கை முடிவு சாா்ந்தது. எனவே, அந்தப் பயிா்கள் மீதான தடை தேவையற்றது’ என்று நீதிபதி சஞ்சய் கரோல் தீா்ப்பளித்தாா். இருவரும் மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியதால், இந்த விவகாரத்தை விசாரிக்க வேறு நீதிபதிகள் அமா்வை அமைப்பதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனா்.
மேலும், ‘மரபணு மாற்றப்பட்ட கடுகு ஆராய்ச்சி, பயிரிடுதல், விற்பனை மற்றும் வணிகம் தொடா்பாக மத்திய அரசு தேசிய கொள்கையை வகுப்பது அவசியம்’ என்று இரு நீதிபதிகள் ஒருமனதாக தீா்ப்பளித்தனா்.
பின்னா், இந்த விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்ற சிறப்பு அமா்வை அமைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, சுதான்ஷு துலியா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘இந்த விவகாரம் தொடா்பான மத்திய அரசின் உயா்நிலைக் குழு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது’ என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான ஆா். வெங்கடரமணி தெரிவித்தாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கை தடைகளின்றி தொடா்ச்சியாக விசாரிக்க விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டு விசாரணையை ஏப்ரல் 15,16-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைத்தனா்.