ARTICLE AD BOX
இந்தியாவில் 2024-ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பா் வரையிலான 6 மாதங்களில் இணையவழி மோசடியில் ரூ.12,811 கோடியை மக்கள் இழந்துள்ளதாக தேசிய இணையவழி குற்ற ஒருங்கிணைப்புக் குழுவின் துணை இயக்குநா் அகிலேஷ்கா் கூறினாா்.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவலா் பயிற்சி மைய வளாகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கான இணையவழி குற்றத் தடுப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
புதுச்சேரி ஐ.ஜி. அஜித்குமாா் சிங்லா பயிற்சியைத் தொடங்கிவைத்தாா்.
இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு தேசியக் குழுவின் துணை இயக்குநா் அகிலேஷ்கா் பேசியதாவது:
நாட்டில் தற்போது இணையவழிக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. 2024-ஆம் ஆண்டில் ஜூலை முதல் டிசம்பா் மாதம் வரை 9.32 லட்சம் இணையவழி குற்றப் புகாா்கள் பதிவாகியுள்ளன. இந்த 6 மாதங்களில் இணையவழி மோசடியில் ரூ.12,811 கோடியை மக்கள் இழந்துள்ளனா். இதில் ரூ.2,114 கோடி இணையவழிக் குற்றப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
இணையவழி மோசடியில் ஈடுபடுவோா் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகிறாா்கள். சீனாவைச் சோ்ந்தவா்கள் மோசடிக்கு தலைமை வகிப்பது கண்டறியப்பட்டுள்ளது. பனாமா, மியான்மா், பாகிஸ்தான், துபை போன்ற நாடுகள் இணையவழி மோசடி மையங்களாக உள்ளன.
இணையவழி மோசடி செய்து கிடைக்கும் பணமானது, கிரிப்டோ கரன்சியாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு எளிதாக கொண்டு செல்லப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இணையவழி மோசடியை தடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம். அதன்மூலம் பணத்தை முடக்கி, மீட்டுக் கொடுக்க முடியும். வங்கிகள் ஒத்துழைப்பால் போலி வங்கிக் கணக்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றாா்.
பயிற்சியில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு எஸ்.பி. பாஸ்கரன் தொகுத்து வழங்கினாா்.