ARTICLE AD BOX
சிலர் எவ்வளவு வசதி படைத்தாலும் மிகவும் அடக்கமாகவும், பணிவாகவும், எப்பொழுதும் இன்சொல் பேசுபவர்களாகவும் இருந்து விடுவார்கள். இதையேதான் வள்ளுவரும் "பணி உடையன் இன் சொலன் ஆதல் ஒருவருக்கு அணி; அல்ல மற்றும் பிற" என்கிறார்.
மற்றும் சிலர் நம்மிடம்தான் எல்லாம் இருக்கிறதே. நாமே பலருக்கும் வேலை வாய்ப்புகளைத் தருகிறோம். நாமே எஜமானனாக இருக்கும்பொழுது நாம் யாரையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை என்று செருக்குடன் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.
அதுபோல்தான் மிகவும் வசதி படைத்த ஒரு எஜமானன் குருவைப் பார்த்து நான்தான் எல்லா வசதியும் படைத்தவனாக இருக்கிறேனே, நான் மற்றவர்கள் சொல் பேச்சைக்கேட்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லைதானே என்று கேட்டான். அதற்கு குருவானவர் சற்று வா வெளியில் சென்று விட்டு வருவோம் என்று கூப்பிட்டார். இருவரும் கொஞ்ச தூரம் சென்றதும் வெயில் கொளுத்தி எடுத்தது. அப்பொழுது குருவே வெயில் மிகவும் கடுமையாக இருக்கிறது. ஆதலால் நிழலைத்தேடி போவோம் வாருங்கள் என்று கூறினார்.
அதற்கு குருவானவர் நாம் ஏன் நிழலைத் தேடிப்போக வேண்டும். நம் நிழல் இருக்கிறதே அதே நிழலில் நின்றுகொண்டு விடலாமே. அதற்கு ஏன் மரத்தின் நிழலை நாட வேண்டும் என்று கேட்டார். அப்பொழுதுதான் அந்த எஜமானருக்கு உரைத்தது.
நம்மிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் மற்றவர்களை சாராமல் வாழ முடியாது. நம் நிழல் நமக்கு உதவாதது போல் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் எல்லாவற்றையும் நாமாகவே செய்து கொள்ள முடியாது. உண்பதற்கு உழவுத்தொழில் செய்பவர்களை நம்பித்தான் வாழ வேண்டும். உடுப்பதற்கு நெசவுத்தொழில் செய்பவர்களை நம்பித்தான் வாழவேண்டும். இருக்கும் இடம் அமைவதற்கு அதற்கான தொழில் செய்பவர்களை பின்பற்றித்தான் வாழ வேண்டும்.
இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தொழில் செய்பவர்களையும் நாம் அனுசரித்துத்தான் நடக்கவேண்டும். அப்படி நடப்பதற்குதான் ஆண்டவன் நமக்கு அதிகமான பொருள் செல்வத்தை கொடுத்திருக்கிறான். ஆதலால் எவ்வளவுதான் காசு பணம் நம்மிடம் இருந்து எஜமானனாக இருந்தாலும், எல்லோரிடமும் இன் சொல் பேசி, அன்பாக, அடக்கமாக நடந்து கொண்டால்தான் நம்மிடம் இருக்கும் பணத்திற்கு மதிப்பும், மரியாதையும் என்று மனதில் தோன்ற குருவை பணிந்தார்.
குரு அமைதியாக நாம் வந்த வேலை முடிந்துவிட்டது என்று எண்ணி, இருப்பிடத்திற்குச் செல்லலாம் என்று அழைத்துச் சென்றார்.
அழகான வாழ்க்கை என்பது ஆடம்பரத்தை சார்ந்தது அல்ல; அன்பையும் அமைதியான அரவணைப்பையும் சார்ந்ததே!