ARTICLE AD BOX
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபியை இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, அவ்வணி மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அதிருப்தி அடைந்த பிசிசிஐ 10 புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் ஒன்றாக, ’உள்நாட்டு கிரிக்கெட்டில் கட்டாயம் விளையாட வேண்டும்’ எனக் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் ரஞ்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அந்த வகையில், விராட் கோலி டெல்லி அணிக்காக சமீபத்தில் களம் கண்டார். நீண்டநாட்களுக்குப் பிறகு டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடும் போட்டியை காண எண்ணற்ற ரசிகர்கள் திரண்டனர். ரஞ்சிப் போட்டியில் கோலி விளையாடியதைக் குறிப்பிடும் விதமாக, 'Ranji Trophy is blessed' என்று ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதாவது, விராட் வருகையால் ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டே ஆசிர்வதிக்கப்பட்டதைப் போலாகிவிட்டது என்பதைக் குறிக்கும் வகையில் அவர் கருத்து தெரிவித்திருந்தார். இது, இணையத்தில் வைரலானது.
ரசிகர்களின் இந்தக் கருத்துக்கு சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ரவிச்சந்திரன் அஸ்வின் காட்டமான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் யூ-ட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ 'ரஞ்சி டிராபி ஆசீர்வதிக்கப்பட்டது' என ஒரு பதிவைப் பார்த்தேன். ரஞ்சிக் கோப்பையின் வரலாறு அவருக்கு தெரியுமா? இத்தனை வருடங்களாக இது நடந்துகொண்டிருக்கிறது. இது இந்தியாவின் முக்கியமான தொடராக இருந்துள்ளது. பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், எப்போதும் ரஞ்சிப் போட்டிகளில் விளையாடி வந்தார். கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதால் வீரர்கள் பயனடைவார்கள். கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முக்கியமில்லை, வீரர்களுக்குத்தான் கிரிக்கெட் முக்கியம்” எனத் தெரிவித்துள்ளார்.