ARTICLE AD BOX
நாம் எப்போதுமே ஒரே மனநிலையில் இருப்பதில்லை. சில சமயம் உள்ளத்தில் உற்சாகம் பொங்கி வழியும். சில நேரங்களில் தாங்க முடியாத எரிச்சல் வரும். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கேட்க வேண்டுமென்றால் அவரது 'மூட்' எப்படியிருக்கிறது என்று பார்த்து அந்த சமயத்தில் அணுக வேண்டும். வீட்டில் சண்டையிருந்தால் அதை தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடமும், ஆபீசில் ஏதாவது பிரச்னை என்றால் அதை மனைவியிடமும் ஆத்திரத்தை காட்டிக் கொட்டித் தீர்ப்பது வழக்கம். எவ்வளவோ விஷயங்கள் எரிச்சல் ஊட்டி நமது 'மூடை'க் கெடுக்கின்றன.
கண்டதைச் சாப்பிட்டுவிட்டு நாம் ஜீரணமாகாமல் வயிற்றில் வலியோடும் கஷ்டப்படும்போது உடல் எரிச்சலுடன் மனமும் எரிச்சலடைகிறது. இதனால் செய்யும் வேலையில் கவனக்குறைவு ஏற்படுகிறது. எல்லோரிடமும் தேவையில்லாமல் கோபம் வருகிறது. மனதுக்குள் ஒரு பயமும், தளர்ச்சியும் ஏற்படுகிறது. உங்களுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்று கவனித்து வாருங்கள். அவற்றைத் தவிர்த்து உணவிற்கும், உங்களது மூடிற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ளலாம்.
நிறங்கள் கூட உங்கள் மூடைக் கெடுக்கக் கூடும் என்று சொல்கிறார்கள். சிவப்பு நிறம் சிலருக்கு எரிச்சலூட்டுகிறது. மஞ்சள் நிறம் மனதில் ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீலம் மனதை அமைதிப்படுத்துகிறது என்கிறார்கள். உங்களுக்கு எந்த நிறம் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறதோ அந்த நிறத்தில் உங்கள் அறைச் சுவர்களை அமைத்துக் கொள்ளுங்கள். நல்ல ஓவியங்களும், படங்களும் கூட உங்கள் மூடை மாற்றக்கூடியது. அதனால் மனதிற்கு உற்சாகமளிக்கக்கூடிய படங்களையும், ஓவியங்களையும் கொண்டு வீட்டை அலங்கரியுங்கள்.
பதவி உயர்வு என்பது சந்தோஷமான விஷயம்தான். அலுவலகத்தில் மதிப்பு கூடுவதோடு, வருமானமும் கூடும். மேலும், அதிகமான பொறுப்பு, குறிப்பிட்ட காலத்தில் தன்னுடன் இருப்பவர்களிடம் வேலை வாங்கி இலக்கை அடைய வேண்டிய கட்டாயம் இவையெல்லாம் ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தி எரிச்சலூட்டக் கூடும்.
உடல் உழைப்பிற்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் சத்துப் பொருட்கள் கொண்ட உணவை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் உங்கள் 'மூட்' மாறக் கூடும். சமவிகிதத்தில் சத்துக்கள் கொண்ட உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நீங்கள் மூட் அவுட்டாகாமல் இருக்க அவசியம் ஆகும்.
சில நேரங்களில் இரவில் அதிக நேரம் கண் விழித்து வேலை செய்யும்போது களைப்பு ஏற்படுகிறது. சரியான நேரத்தில் தூங்கச் செல்வது அல்லது செல்லாமல் இருப்பது கூட உங்கள் மூடை மாற்றக்கூடும். மிக அதிகமாக கண் விழித்திருந்து காலையில் எழுந்திருப்பவர்களுக்கு வழக்கமான நேரத்தில் தூங்கி எழுந்திருப்பவர்களை விட மூன்று பங்கு அதிக மனஅழுத்தம் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது.
தேவைக்கு அதிகமான வெளிச்சம்கூட உங்கள் தூக்கத்தை பாதிக்கக் கூடும். பசியைக் குறைத்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும். புகைப்பது உடல் நலத்திற்குக் கேடு என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், அதனால் மனரீதியான கோளாறுகளும் வர வாய்ப்பிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று தெரிவிக்கிறார்கள்.
நண்பர்களோடு இருக்கும்போது சில சமயங்களில் உற்சாகமும் ஏற்படும். சில சமயங்களில் அவர்கள் பேசுவது பிடிக்காமல் எரிச்சலும் ஏற்படும். இந்த இரண்டுமே உங்களை அறியாமலே உங்களைத் தொற்றிக்கொள்ளும். எரிச்சலான மனநிலையில் இருக்கிறோமா? என்பதை நீங்களே உணர்ந்து அதனை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.