ARTICLE AD BOX
மதுரையில், சாக்கு மூட்டையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகேயிருக்கும் தனியார் விடுதிக்கு எதிரே உள்ள சாலையில் துர்நாற்றம் வீசியது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த சாக்கு மூட்டையை எடுத்து பார்த்தனர். அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பெண்ணின் முகம் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததால் அவர் யார் என அறிவதில் சிக்கல் எழுந்தது. எனினும், கைரேகை மூலம் அடையாளம் காணும் பணியை போலீசார் தொடர்ந்தனர்.
மேலும், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காணாமல் போனவர்களின் தகவல்கள் குறித்தும் சேகரிக்கப்பட்டு வருகிறது. சடலத்தை ஆராய்ந்து பார்த்ததில் அப்பெண் உயிரிழந்து சுமார் 4 நாட்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.