ARTICLE AD BOX
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜனவரி 2025 நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24% நிறைவடைந்துள்ளது. 2027 பிப்ரவரிக்குள் முழு கட்டுமானமும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையை ஒவ்வொரு மாநிலத்திலும் தொடங்க திட்டம் அறிவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் முடிவடைந்து பல்வேறு மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக பல்வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இறுதியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டது.
ஆனால் எந்த வித பணிகள் துவங்காமல் பல ஆண்டு காலம் பூஜை போட்ட செங்கல் மட்டும் தான் கட்டுமான பணி இடத்தில் காணப்பட்டது. இதனை தமிழக அரசியல் கட்சிகள் விமர்சித்தது. மற்ற மாநிலங்களில் செயல்பட தொடங்கிய எஸ்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் எங்கே என கேள்வி கேட்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியானது தொடங்கியுள்ளது. தற்போது ஜனவரி 2025 நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24% நிறைவடைந்துள்ளது - 2027ல் மதுரை எய்ம்ஸ்சின் முழு கட்டுமானமும் நிறைவடையும் என மதுரை எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். அதன் படி தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்திலுள்ள தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் பரந்த வளாகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டப்பட்டுவருகிறது. மே 22, 2024 அன்று தொடங்கப்பட்ட இந்த கட்டுமானத் திட்டம் இரண்டு கட்டங்களாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதற்கட்டத்தில் கல்வி வளாகம், வெளிநோயாளர் மருத்துவ சேவைகள், மாணவ / மாணவியர் தங்கும் விடுதிகள் மற்றும் அத்தியாவசிய சேவை கட்டிடங்கள் போன்ற முக்கிய வசதிகள் அடங்கியுள்ளன. முதற்கட்டப் பணிகள் தொடக்க தேதியிலிருந்து 18 மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 2025 நிலவரப்படி முதற்கட்ட கட்டுமானத்தில் 24% நிறைவடைந்துள்ளது. இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். முழு கட்டுமானத் திட்டத்தையும் பிப்ரவரி 2027 க்குள் 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுவரை, ஒட்டுமொத்தமாக கட்டுமானத்தில் 14.5% முன்னேற்றம் அடைந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுள்ள 900 படுக்கைகளில் 150 படுக்கைகள் பிரத்யேகமாக தொற்று நோய்க்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்வி வளாகம், மருத்துவமனை வளாகம், விடுதி வளாகம், குடியிருப்பு வளாகம், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம் ஆகியவை அடங்கியுள்ளன. இது மாணவர்கள் மற்றும் நோயாளிகள் இருவருக்கும் ஒரு முழுமையான கட்டிடமாக மதுரை எய்ம்ஸ் அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.