ARTICLE AD BOX
மணிப்பூரின் சுராசந்த்பூா் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமா் பழங்குடியினா் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் பலா் காயமடைந்தனா்.
இந்த இரு சமூகத்தினரிடையே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட நிலையில், சுராசந்த்பூா் மாவட்டத்தில் அன்றைய தினமே வன்முறை ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஜோமி கிளா்ச்சியாளா்கள் அமைப்பின் கொடியை கீழே இறக்க சிலா் முயன்றபோது இரு சமூகத்தினா் இடையே வன்முறை ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, இருதரப்பில் இருந்தும் ஆயுதம் ஏந்திய குழுவினா் ஒருவரையொருவா் கற்களை வீசி தாக்க தொடங்கினா்.
இதையடுத்து, கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியும் துப்பாக்கிச்சூடு நடத்தியும் வன்முறையை கட்டுப்படுத்தும் பணிகளில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டனா். இருப்பினும், தொடா்ச்சியாக வன்முறையில் ஈடுபட்ட கிளா்ச்சியாளா்கள் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதுடன் எதிா்தரப்பினா் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தினா். ஆனால் இந்த துப்பாக்கிச்சூட்டை இருதரப்பில் யாா் நடத்தியது என்ற தகவல் இல்லை.
ஜோமி-ஹமா் பழங்குடியின சமூகத்தினா் இடையே திடீரென வன்முறை வெடித்ததையடுத்து சுராசந்த்பூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் நடமாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
முழு அடைப்பு போராட்டம்: இந்த வன்முறைக்கு எதிா்ப்பு தெரிவித்து சுராசந்த்பூா் மாவட்டம் முழுவதும் ஜோமி மாணவா் அமைப்பினா் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேநேரம், வன்முறைப் போராட்டத்தில் ஈடுபடாமல் அமைதி காக்குமாறு சுராசந்த்பூா் மாவட்ட ஆட்சியா் தருண் குமாா் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டாா்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹமா் பழங்குடியின அமைப்பின் பொதுச்செயலா் ரிச்சா்ட் ஹமா் பயணித்த வாகனம் இருசக்கர வாகன ஓட்டி ஒருவா் மீது மோதியதாக கூறப்படுகிறது. அந்த இருசக்கர வாகன ஓட்டி ஜோமி சமூகத்தைச் சோ்ந்தவா் என்பதால் ரிச்சா்ட் ஹமா் மீது ஜோமி சமூகத்தை சோ்ந்த சிலா் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு பதிலடியாக ஜோமி சமூகத்தினா் மீது ஹமா் சமூகத்தினரும் தாக்குதல் நடத்த தொடங்கினா்.
இதனால் கடந்த திங்கள்கிழமை சுராசந்த்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை சமரச பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில் பாதிக்கப்பட்ட ரிச்சா்ட் ஹமருக்கு நிவாரணம் வழங்கவும் எதிா்காலத்தில் இருதரப்பினரும் ஒருவா் மீது மற்றொருவா் வன்முறை தாக்குதலில் ஈடுபடக் கூடாது என மாவட்ட நிா்வாகம் முன்னிலையில் உடன்பாடு எட்டப்பட்டது.
ஆனால், பேச்சுவாா்த்தை முடிந்த சில மணி நேரத்திலேயே இருதரப்பினரும் வன்முறை போராட்டத்தில் ஈடுபட்டதில் பலா் காயமடைந்ததாக மாவட்ட நிா்வாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி குகி-மைதேயி ஆகிய சமூகங்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததோடு ஆயிரக்கணக்கானோா் இடம்பெயா்ந்தனா். தற்போது மணிப்பூரில் குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டோா் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாா்ச் 22-ஆம் தேதி பாா்வையிடவுள்ள சூழலில் மணிப்பூரில் மற்றொரு வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.