ARTICLE AD BOX
ஈரான் சிறையில் 880 நாள்களாக அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டு இளைஞர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆலிவியர் க்ரோண்டியோ என்ற இளைஞர், உலகம் முழுவது பயணம் செய்வதை தனது வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், ஈரான் நாட்டுக்கு பயணம் செய்திருந்த அவர் அவர் மீது கடந்த அக்டோபர் 2022 ஆம் ஆண்டு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்த குற்றச்சாட்டுக்களை ஆலிவியர், அவரது குடும்பத்தினர் மற்றும் பிரான்ஸ் அரசு தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதனைத் தொடர்ந்து, பெரும்பாலும் வெளி நாட்டு கைதிகளை அடைத்து வைத்திருக்கும் ஈரானின் பயங்கரமான எவின் சிறையில் அடைக்கப்பட்ட ஆலிவர் 880 நாள்கள் கழித்து தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க: சீனாவில் 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
இதுகுறித்து, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அந்த இளைஞரின் விடுதலைக்கான காரணம் பற்றி எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், ஈரான் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பிரான்ஸ் நாட்டு குடிமக்களான செசில் கோஹ்லர் மற்றும் ஜாக்குவெஸ் பாரிஸ் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என அதிபர் மாக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் அணு ஆயுத திட்டம் குறித்து பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து வரும் நிலையில் பெர்சிய புத்தாண்டின் சமயத்தில் ஆலிவியர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பிய மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரான ஜீன் நோயல் பாரோட், ஆலிவியர் விமானத்தில் நாடு திரும்புவது போன்ற புகைப்படத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இருப்பினும், அவரது விடுதலை குறித்து ஈரான் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, ஈரானில் கடந்த 2022 ஆம் ஆண்டு மஹ்ஸா அமினி என்ற 22 வயது இளம்பெண் ஹிஜாப் அணியாததினால் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவர்களது கட்டுப்பாட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இதனால், அந்நாடு முழுவதும் வெடித்த மக்கள் போராட்டத்தை ஈரான் அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கியது. இதே காலக்கட்டத்தில் தான் ஆலிவியர் கைது செய்யப்பட்டதால் அவரும் அந்த போராட்டங்களில் பங்குபெற்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.