ARTICLE AD BOX
மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக் கொள்கையால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்கு தண்டனை விதிக்கும் கொள்கையை பாஜக செயல்படுத்த முயற்சி செய்வதாகவும் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டினார். 1976ஆம் ஆண்டில், இந்தியா குடும்பக் கட்டுப்பாட்டை செயல்படுத்த முடிவு செய்தபோது, தென்னிந்திய மாநிலங்கள் அதை மிகச் சிறப்பாக செயல்படுத்தின. ஆனால் வடக்கில் உள்ள பெரிய மாநிலங்கள் அதில் தோல்வியடைந்தன என்று அவர் குறிப்பிட்டார்.
தென்மாநிலங்கள் அற்புதமாக மாறிவிட்டதாக பெருமிதம் தெரிவித்த தெலுங்கானா முதல்வர், "வேகமான பொருளாதார வளர்ச்சி, பெரிய அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி, அதிக தனிநபர் வருமானம், வேலைவாய்ப்பு உருவாக்கம், சிறந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, சிறந்த நிர்வாகம் மற்றும் சிறந்த சமூக நலன் ஆகியவற்றை நாம் அடைந்துள்ளோம்" என்றார்.
நாம்தான் தேசிய கருவூலத்திற்கு அதிக பங்களிப்பு செய்கிறோம், ஆனால் பதிலுக்கு குறைவான ஒதுக்கீட்டைப் பெறுகிறோம் என்று ரேவந்த் ரெட்டி கவலை தெரிவித்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, தொகுதி மறுவரையறை பிரச்சினையில் தென் மாநிலங்கள், ஒடிசா, பஞ்சாப் ஆகியவை ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம்:
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுவின் முதல் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
இதில் கேரளா, தெலுங்கானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் முதலமைச்சர்கள் பினராயி விஜயன், ரேவந்த் ரெட்டி, பகவந்த் சிங் மான் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கர்நாடகாவிலிருந்து துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கலந்துகொண்டிருகிகறார். ஒடிசா முன்னாள் முதல்வரும் பி.ஜே.டி கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் வீடியோ கால் மூலம் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் பேசிய தமிகழ முதல்வர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் தொகுதி மறுவரையறை செயல்முறையின் காரணமாக தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழந்தால், அது இந்தியாவில் கூட்டாட்சியின் அடித்தளத்தையே பாதிக்கும் என்றார்.