ARTICLE AD BOX
மகாராஷ்ட்ராவில் உற்பத்தி ஆலை அமைக்கிறதா டெஸ்லா? – வெளியான புது அப்டேட்..
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் தன்னுடைய டெஸ்லா மின்சார வாகன உற்பத்தி ஆலையை இந்தியாவில் நிறுவுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி ஆலையை அமைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மகாராஷ்டிரா மாநில அரசு எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தன்னுடைய உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக புனேவுக்கு அருகில் இருக்கக்கூடிய சக்கான் மற்றும் சிக்காலி ஆகிய இரண்டு பகுதிகளில் இருக்கும் நிலங்களை வழங்க முன் வந்திருப்பதாக தெரிவித்துள்ளது. நீண்ட காலமாகவே எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தயாரிக்க கூடிய மின்சார வாகனங்கள் இந்திய சந்தையில் எப்போது விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

ஆனால் இந்தியாவில் வரி அதிகமாக இருப்பதால் டெஸ்லா நிறுவனம் தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவி இங்கே மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யலாம் டெஸ்லாவுக்கு சாதகமாக மின்சார வாகன கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது.
இந்த சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தன்னுடைய அமெரிக்க பயணத்தின் போது டெஸ்லா தலைவர் எலான் மஸ்கை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து எலான் மஸ்க் தன்னுடைய மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தை இந்தியாவில் நிறுவுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பல்வேறு மாநில அரசுகளும் டெஸ்லா நிறுவனத்தை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. இதில் மகாராஷ்டிரா முன்னிலை வகிப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை எந்த இடத்தில் தங்களுடைய ஆலையை நிறுவ போகிறோம் என்று அதிகாரப்பூர்வமான தகவலை டெஸ்லா வெளியிடவில்லை என்றாலும் பல்வேறு மாநில அரசுகளும் போட்டி போட்டுக் கொண்டு இந்த நிறுவனத்திற்கு நிலத்தை வழங்குவதற்கு முன் வந்துள்ளன.
டெஸ்லாவை பொருத்தவரை இந்தியாவில் துறைமுக வசதிகளும் இருக்கும் பகுதிகளாக பார்த்து ஆலையை நிறுவுவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி மையமாக இருக்கக்கூடிய சக்கான் பகுதியில் நிலத்தை வழங்குவதற்கு முன் வந்திருக்கிறது . இந்த பகுதியில் ஏற்கனவே டாடா மோட்டார்ஸ், மகேந்திரா, மெர்சிடிஸ் பென்ஸ் , ஃபோக்ஸ்வேகன், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன.
இந்த பகுதி திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடைக்கும் பகுதியாக மட்டுமில்லாமல் வாகன உற்பத்திக்கு தேவையான அனைத்து போக்குவரத்து மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது. டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே இந்த பகுதியில் தன்னுடைய அலுவலகம் ஒன்றையும் அமைத்துள்ளது.
இதனிடையே டெஸ்லா நிறுவனம் தன்னுடைய ஆலையை நிறுவுவதற்கு முன்பாக இந்தியாவில் ஊழியர்களை தேர்வு செய்யும் பணிகளையும் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிறுவனம் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் இந்தியாவில் சுமார் 13 பதவிகளுக்கு ஆட்களை வேலைக்கு தேர்வு செய்வதாக தெரிவித்துள்ளது. இதில் வாகன சேவை ,விற்பனை ,வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில் செயல்முறைகள் ஆகிய பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டெஸ்லா நிறுவனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து சில ஊழியர்களை வேலைக்கு எடுக்க முயற்சி செய்து வருவதாகவும் சொல்லப்படுகிறது
Story written by: Devika