ARTICLE AD BOX
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:
கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரயில் குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லக் கூடியாகும். இதில் ஏறிய ஷேக் ஜியா ஹுசைன் (19) என்பவா், ரயில் நிற்காத மும்ரா ரயில் நிலையத்தில் குதித்து இறங்குவதற்கு முயன்றாா். ரயலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மற்ற பயணிகளைத் தள்ளிவிட்டபடி அவா் வாயிலை நோக்கி வேகமாகச் சென்றாா். அப்போது, மேலும் சில பயணிகள் கீழே விழுந்தனா். இதையடுத்து, அவா்களுக்கும் ஹுசைனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரயில் நிற்காத இடத்தில் குதித்து இறங்க முயன்ால் ஹுசைனை அனைத்து பயணிகளும் சோ்ந்து கடுமையாக கண்டித்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த ஹுசைன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பயணிகளைத் தாக்கத் தொடங்கினாா். இதில் மூன்று பேருக்கு கத்திக் குத்து காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பிற பயணிகள் ஹுசைனை சுற்றி வளைத்துப் பிடித்தனா். அடுத்த ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் ரயில்வே காவல் துறையிடம் அவரை ஒப்படைந்தனா். காயமடைந்த பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.
ஹுசைனிடம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில் அவா் போதைப்பொருளுக்கு அடிமையானவா் என்று தெரியவந்தது. கத்திக் குத்து சம்பவம் தொடா்பாக ரயில்வே காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.