ARTICLE AD BOX
மகா சிவராத்திரி ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். சிருஷ்டியின் தொடக்கத்தில் இறைவனே தெய்வீக நெருப்புத் தூணாக தன்னை வெளிப்படுத்தி கொண்ட நாளைத் தான் மகா சிவராத்திரி என்று அனுஷ்டிக்கிறோம். உமையம்மை சிவபெருமானை குறித்து பூஜை செய்த நாள் மகா சிவராத்திரி. அந்த பூஜையினால் மகிழ்ந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் ஆவிர்பவித்து அருளியதை நம் ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன.
சிவராத்திரி விரத வகைகள்:
நித்திய சிவராத்திரி
மாத சிவராத்திரி
பட்ச சிவராத்திரி
யோக சிவராத்திரி
மகா சிவராத்திரி
என சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி எனப்படும்.
மகா சிவராத்திரி அன்று சிவாலயங்களில் நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நம் வசதிக்கேற்ப அபிஷேக பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.
மழலைச் செல்வம் வேண்டுவோர் தரிசிக்க வேண்டிய முதல் கால பூஜை:
மழலைச் செல்வம் வேண்டுவோர் வணங்க வேண்டிய காலம் முதற்காலம். வழிபட வேண்டிய மூர்த்தம் சோமாஸ்கந்தர். சோமாஸ்கந்தர் என்பது உமையம்மை, கந்தனுடன் விளங்கும் சிவபெருமானை குறிக்கும். ஆலயங்களில் முதற்காலத்தில் பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்து செம்பட்டு உடுத்தி, வில்வத்தால் அலங்காரம் செய்து தாமரை, அலரிப் பூக்களால் அர்ச்சனை செய்து பால் அன்னம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வது வழக்கம். இதனைக் கண்டு தரிசிக்க மழலைச் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கை.
கல்விச்செல்வம் அருளும் இரண்டாம் கால பூஜை:
இரண்டாம் கால பூஜை இரவு 9.30 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரை நடைபெறும். இந்த சமயத்தில் ஈசனை தக்ஷிணாமூர்த்தியாக வழிபடுவது சிறந்தது. ஆலமர் செல்வனாக ஆலமரத்தின் அடியில் நான்கு முனிவர்களுடன் அமர்ந்து மௌனமாக உபதேசிக்கும் ஞான வடிவமே தக்ஷிணாமூர்த்தி. இந்த உருவில் ஈசனை மகா சிவராத்திரி அன்று வழிபட கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
ஆலயங்களில் இரண்டாம் கால பூஜை என்பது பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து குருந்தை அலங்காரம் செய்து மல்லிகை முல்லை கொண்டு அர்ச்சனை செய்வதும், பாயசம், பலாப்பழம் போன்றவற்றை நிவேதனம் செய்வதும் வழக்கம். மஞ்சள் வஸ்திரம் சார்த்தி குங்கிலிய தூபம் போடுவதையும் தரிசிக்க சிறந்த பலன் கிடைக்கும்.
சகல செல்வங்களும் கிடைக்க மூன்றாம் கால பூஜை:
வழிபட வேண்டிய மூர்த்தம் லிங்கோத்பவர். தேனால் அபிஷேகம் செய்து, கிளுவை, விளாக்களால் அலங்காரம் செய்து, ஜாதி மலர் வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். எள் அன்னம் மற்றும் மாதுளம் பழம் நிவேதனம் செய்து வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி ஐந்து முக தீபம் காட்டும் மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 2 மணி அளவில் நடைபெறும்.
லிங்க பாணத்தின் நடுவில் சந்திரசேகர் திருமேனி போல் அமைந்திருப்பது தான் லிங்கோத்பவ வடிவம். பிரம்மாவும், திருமாலும் இருபுறமும் வணங்கிய நிலையில் காணப்படுவார்கள். சிவாலயங்களில் கருவறைக்கு பின்புற சுவரில் லிங்கோத்பவ மூர்த்தி அமைந்திருக்கும். இத்திருக்கோலத்தை மூன்றாம் கால பூஜையின் போது நினைத்து வழிபட சகல செல்வங்களும் , ஞானமும், மோட்சமும் கிட்டும் என்பது நம்பிக்கை.
சகல சௌபாக்கியங்களும் கிட்டும் நான்காம் கால பூஜை:
நான்காம் காலத்தில் வழிபட வேண்டிய மூர்த்தம் ரிஷபாருடர். கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்து, கருநொச்சி, ரோஜா மலர்களால் அலங்காரமும், நந்தியாவட்டை மலர் கொண்டு அர்ச்சனையும் செய்வது சிறப்பு. வெண் சாதம், பலவிதமான பழங்கள் கொண்டு நிவேதனம் செய்வதும், நீலவஸ்திரம் சார்த்தி மூன்று முக தீபம் காட்டுவதும் நான்காம் கால பூஜையின் சிறப்பு.
உலகமும் அதன் உயிர்களும் ஒடுங்கி அழியும் ஊழிக் காலத்தில் தாமும் அழிய வேண்டி வருமே என்று அஞ்சிய தர்ம தேவதை என்ன செய்வதென்று ஆராய்ந்து ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானை தஞ்சமடைய, சிவபெருமான் அதன் மீது ஏறிக்கொண்டு அருள் புரிந்த நிலையே ரிஷப வாகன ரூபத்தில் காட்சி தருவது. இந்த திருக்கோலத்தில் இறைவனை வழிபட சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.
மாத சிவராத்திரி விரதம் கடைபிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய அனைத்து சிவராத்திகளிலும் வழிபட்ட பலன் கிடைக்கும்.