ARTICLE AD BOX
பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் சிரமமின்றி கலந்துகொள்ள இதுவரை 14 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்நிகழ்வு, பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.
இதுவரை 60 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மெளனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாள்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் புனித நீராடினர்.
பக்தர்களின் இந்த ஆன்மிக ஒன்றுகூடலுக்கு ரயில்வே துறை மிகப்பெரிய பங்காற்றியுள்ளது. கும்பமேளாவில் பக்தர்கள் சிரமமின்றி பங்கேற்பதற்காக இதுவரை 14 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பிரயாக்ராஜுக்கு இயக்கப்பட்ட மொத்த ரயிக்களில் 92 சதவீத ரயில்கள் எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட், பாசிஞ்சர், மெமூ ரயில்கள். இதில் 472 ரயில்கள் ராஜ்தானி மற்றும் 282 வந்தே பாரத் ரயில்கள்.
இந்த எண்ணிக்கையில் பாதியளவு ரயில்கள் உத்தரப் பிரதேசத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 11% ரயில்கள் தில்லி, 10% பிகாரில் இருந்தும் 3% - 6% ரயில்கள் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
கடந்த ஒன்றரை மாதத்தில் 12 முதல் 15 கோடி பக்தர்கள் ரயில்களில் பயணித்து கும்பமேளாவில் பங்கேற்றுள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் அவ்வபோது கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
மகா கும்பமேளா தொடங்கியதில் இருந்து இதுவரை 13,667 ரயில்கள் பிரயாக்ராஜ் மற்றும் அண்டை நகரங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ளன. இதில் 3,468 ரயில்கள் மகா கும்பமேளா நடைபெற்றுவரும் பிரயாக்ராஜில் இருந்து இயக்கப்பட்டுள்ளன. 2,008 ரயில்கள் மற்ற பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டுள்ளன. 8,211 ரயில்கள் வழக்கமான சேவைகள். பிரயாக்ராஜ் சந்திப்பில் இருந்து 5,332 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
பிரயாக்ராஜ் பகுதிக்கு சென்றுசேர பக்தர்களின் பயணத்தை எளிமையாக்க அதனைச் சுற்றிலும் 9 நிலையங்கள் பரபரப்பாக செயல்பட்டன.
இதில் அதிகபட்சமாக பிரயாஜ்ராஜ் சந்திப்பில் இருந்து 5,332 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக சுபேதார்கஞ்ச் பகுதியில் இருந்து 4,313 ரயில்களும் நைனி பகுதியில் இருந்து 2,017 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும்