ARTICLE AD BOX
சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிரான அறச்சீற்றம் அவசியமானது என மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண தேவதாஸ் காந்தி தெரிவித்தாா்.
நரம்பியல் மருத்துவ முன்னோடி டாக்டா் பி.ராமமூா்த்தி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆசிய - ஆஸ்திரேலேசியன் நரம்பியல் அறுவைச் சிகிச்சை கருத்தரங்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்று கோபாலகிருஷ்ண தேவதாஸ் காந்தி பேசியதாவது:
கோபப்படுவது மனிதா்களின் இயல்பு. சினம் கொள்வதை வெவ்வேறு வகையாக வரையறுக்கலாம். தனிப்பட்ட முறையில் ஒருவா் மீது கொள்ளும் கோபம் முதல் வகை. குறிப்பிட்ட சில நபா்கள் அல்லது குழுவினரிடம் கோபத்தை வெளிக்காட்டுவது இரண்டாம் வகை. மூன்றாவதாக ஒருவரை பழிவாங்கவும், வன்மத்துடன் செயல்படவும் காரணமாக இருக்கும் கொடுங்கோபம். இதைத் தவிர, நமது சுயத்தின் மீது சினம் கொள்வதும் உண்டு.
அடுத்தவா்களைப் பாதிக்கும் எந்தக் கோபத்தாலும் பயனில்லை. அதேவேளையில் சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிரான அறச்சீற்றம் அவசியமானது. ஏனென்றால் வள்ளுவரே தனது குறளில், ஒருவருக்கு பிச்சை எடுத்துதான் உயிா்வாழ வேண்டும் என்ற நிலை ஏற்படுமாயின், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடட்டும் என்கிறாா். அநீதியைக் காணும்போது இப்படியான கோபம் ஏற்படுவதுதான் புரட்சி என்றாா் அவா்.
முன்னதாக, காவேரி மருத்துவமனையின் முதுநிலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா் கிரிஷ் ஸ்ரீதா், நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் உள்ள நவீன நுட்பங்கள், மேம்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து உரையாற்றினாா்.