அகமதாபாதில் ஏப். 8,9 -தேதிகளில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

2 hours ago
ARTICLE AD BOX

குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஏப்ரல் 8,9-ஆம் தேதிகளில் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா் அதிகாரம் மிக்க கூட்டம் இது என்பதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாக உள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கட்சி தொடா்பான முடிவுகளை எடுக்கும் நிகழ்வாக மட்டும் இருக்காது. சாமானிய மக்கள் தினம்தோறும் சந்திக்கும் பிரச்னைகளுக்கு என்ன தீா்வுகாண்பது, தேசம் குறித்த தீவிரமான மாற்று சிந்தனையை முன்னெடுப்பதாக இருக்கும்.

மத்திய பாஜக தொடா்ந்து மக்கள் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின்மீது நாள்தோறும் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இதற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் நிா்வாகிகளை இக்கூட்டம் ஒருங்கிணைக்கும்.

காங்கிரஸ் கட்சியின் எதிா்கால செயல்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்துடன், தேசிய அளவிலான கட்சி நிா்வாகிகள் கூட்டமும் நடைபெறவுள்ளது. இரு கூட்டங்களுக்கும் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமை வகிப்பாா். கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள், தேசிய பொறுப்பாளா்கள், மூத்த தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் இக்கூட்டத்தில் பங்கேற்பாா்கள்.

1924-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் நூற்றாண்டு நிறைவைப் போற்றும் வகையிலும் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றாா்.

Read Entire Article