ARTICLE AD BOX
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் விழா முடிய சில நாட்களே இருக்கும் நிலையில், பக்தர்கள் எண்ணிக்கை தற்போது 60 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது.
இன்னும் 3 நாட்கள் (பிப்.26) நடைபெறும் இந்த நிகழ்வில் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களால் பிரயாக்ராஜ் நகர் மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. கும்பமேளா இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதால், புனிதநீராட பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து வருகின்றனர். இதனால், பிரயாக்ராஜ் நகரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, கும்பமேளாவில் திறந்த வெளியில் இயற்கை உபாதைகள் கழிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், உத்தரப்பிரதேச அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. நிபுன் பூஷண் என்பவர், தேசிய பசுமை தீர்பாயத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சுத்தமான கழிப்பறைகள் இல்லாததால் லட்சக்கணக்கானோர், கங்கை நதிக்கரையில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மோசமான சுகாதார வசதிகளை ஏற்படுத்தியிருப்பதற்காக, உத்தரபிரதேச அரசு தனக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டுமெனவும் கோரியுள்ளார். திரிவேணி சங்கமத்தில், faecal coliform பாக்டீரியாக்கள் அதிகளவில் இருப்பதாக, கடந்தாண்டு நவம்பரில் வெளியான அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவாகரத்தில், உத்தரப்பிரதேச அரசு பதிலளிக்க ஆணையிட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், வழக்கை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
முன்னதாக, திரிவேணி சங்கமத்தில் அதிகளவு பாக்டீரியா இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வுகள் தெரிவித்தன. பிரயாக்ராஜில் வெவ்வேறு இடங்களில் ஆற்று நீரை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அந்த நீரானது, மனிதர்கள் குளிப்பதற்கு உகந்த தரத்தில் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை சமர்ப்பித்தது.
கோடிக்கணக்கானோர் நீராடியதால் மனிதக் கழிவுகள் அதிகளவில் ஆற்று நீரில் கலந்திருப்பதாகவும், இதன் காரணமாக அவற்றின் வழியே பரவும் ‘ஃபீக்கல் கோலிஃபார்ம்’ நுண்ணுயிரிகளால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனை சுட்டிக்காட்டி உடனடியாக நடவடிக்கை எடுக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அத்துடன் விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரப் பிரதேச மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஆணையிட்டது. இதற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுப்பு தெரிவித்திருந்தார்.