உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கடந்த மாதம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டதால் தண்ணீர் மாசுபட்டதாக சமாஜ்வாடி கட்சி எம்.பி ஜெயா பச்சன் குற்றம் சாட்டினார்.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, பொது மக்களுக்கு எந்த சிறப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை என்றும் சாடினார்.

மேலும் அவர் கூறுகையில், ”தற்போது தண்ணீர் எங்கு மிகவும் மாசுபட்டுள்ளது? அது கும்பமேளாவில் உள்ளது. கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டுள்ளன. இதனால் தண்ணீர் மாசுபட்டுள்ளது. உண்மையான பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. கும்பமேளாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு எந்த சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படுவதில்லை, அவர்களுக்கான ஏற்பாடும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜனவரி 29ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களின் உடல்கள் கும்பமேளாவில் வீசட்டுள்ளன. பிரேத பரிசோதனை செய்யாமல் கண் துடைப்பு நாடகங்கள் அரங்கேறியுள்ளன. இதே தண்ணீர் அங்குள்ள மக்களைச் சென்றடைகிறது. பாஜக தலைமையிலான அரசாங்கம் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும் முழுமையான கண்துடைப்பு செய்யப்படுகிறது. அவர்கள் தண்ணீர் மற்றும் ஜல் சக்தி குறித்து உரை நிகழ்த்துகிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் அந்த இடத்தைப் பார்வையிட்டதாக அவர்கள் பொய் சொல்கிறார்கள். எந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் எப்படி கூட முடியும்?” எனத் தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல எதிர்க்கட்சிகள், உத்தரப் பிரதேச அரசு கும்பமேளாவில் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைத்துவிட்டதாக குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

ஜனவரி 29 ஆம் தேதி அதிகாலை 1.30 மணியளவில், கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள சங்கம மூக்கு பகுதியில் நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 'மௌனி அமாவாசை' அன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் நீராடுவது புனிதமானதாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், 18 மணி நேரத்திற்குப் பிறகுதான், 30 பேர் இறந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை தொடரும். இந்த விழாவை நடத்தும் உத்தரபிரதேச அரசு, உலகின் மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டத்தில் மொத்தம் 40 கோடி யாத்ரீகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறது.