மகளிர் பிரீமியர் லீக்: உ.பி.வாரியர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை வெற்றி

3 hours ago
ARTICLE AD BOX

பெங்களூரு,

5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து உ.பி.வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரன் நவ்கிரே மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கிரன் நவ்கிரே 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து விரிந்தா தினேஷ் களம் இறங்கினார். விரிந்தா தினேஷ் - கிரேஸ் ஹாரிஸ் இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் கிரேஸ் ஹாரிஸ் 45 ரன்னிலும், விரிந்தா தினேஷ் 33 ரன்னிலும், அடுத்த வந்த தீப்தி சர்மா 4 ரன்னிலும், தஹ்லியா மெஹ்ராத் 1 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.இதையடுத்து ஸ்வேதா ஷெராவத் மற்றும் உமா செத்ரி ஜோடி சேர்ந்தனர். இதில் ஸ்வேதா ஷெராவத் 19 ரன்னிலும், அடுத்து வந்த சின்னெலே ஹென்றி 7 ரன்னிலும், எக்லெஸ்டோன் 6 ரன்னிலும், சைமா தாக்கூர் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.இறுதியில் உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தது. உ.பி.வாரியர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 45 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் நாட் ஸ்கைவர்-பிரண்ட் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை விளையாடியது.

தொடக்கத்தில் யாஷிகா பாட்டியா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார் . தொடர்ந்து ஹைலே மேத்யூஸ், நட் ஸ்கிவர்-ப்ரண்ட் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் . பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு விரட்டினர் . சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். ஹைலே மேத்யூஸ் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் .� 17 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு மும்பை 143 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. மும்பை அணியில் நட் ஸ்கிவர்-ப்ரண்ட் 75� ரன்கள் எடுத்தார்.

Read Entire Article