ARTICLE AD BOX
லாகூர்: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைக்கான 8வது போட்டியில் நேற்று ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 325 ரன் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 22 முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று, பி பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் லாகூரில் நேற்று நடந்த போட்டியில் களம் கண்டன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களில் ஒருவரான ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் கிளீன் போல்டாகி 6 ரன்னில் வீழ்ந்தார். பின் வந்தோரில் செதிகுல்லா அடல் 4, ரஹ்மத் ஷா 4 ரன் எடுத்து ஆர்ச்சர் பந்துகளில் ஆட்டமிழந்தனர். இதனால் 9 ஓவர் முடிவதற்குள் ஆப்கானிஸ்தான் 3 விக்கெட் இழந்து 37 ரன் மட்டுமே எடுத்து மோசமான நிலையில் இருந்தது.
அதன் பின் வந்த கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி, அஸ்மதுல்லா ஒமர்ஸாய், முகம்மது நபி ஆகியோருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து மற்றொரு துவக்க வீரர் இப்ராகிம் ஸாட்ரன் ரன் வேட்டையில் ஈடுபட்டார். இப்ராகிம் 177 ரன் குவித்தார். ஷாகிதி 40, ஒமர்ஸாய் 41, நபி 40 ரன் விளாசினர். இதனால், 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழந்து 325 ரன் குவித்தது. ஆர்ச்சர் 3, லியாம் லிவிங்ஸ்டோன் 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 326 ரன் இமாலய வெற்றி இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. துவக்க வீரர் பில் சால்ட் 12 ரன்னில் ஒமர்ஸாய் பந்தில் கிளீன் போல்டானார். பின் வந்த ஜேமி ஸ்மித் 9 ரன்னில் நபி பந்தில் ஒமர்ஸாயிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மற்றொரு துவக்க வீரர் பென் டக்கெட் 38 ரன்னில் வீழ்ந்தார். ஹேரி புரூக் 25 ரன்னில் அவுட்டானார். 22 ஓவர் முடிவில் இங்கிலாந்து, 4 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது. ஜோரூட் 43, ஜோஸ் பட்லர் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
ஆறுதல் வெற்றிக்கு மோதும்: பாக். – வங்கதேச அணிகள்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை போட்டியை நடத்தும், நடப்பு சாம்பியன் பாகிஸ்தானும், வங்கதேசமும் இழந்து விட்டன. ஏ பிரிவில் உள்ள இந்த அணிகள் தங்கள் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று மோதுகின்றன. அதுமட்டுமின்றி, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் பாக்-வங்கதேச அணிகள் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்க உள்ளன. ஆறுதல் வெற்றியுடன் விடைபெற இரு அணிகளும் முனைப்புக் காட்டும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். அதற்கு ராவல்பிண்டியில் மழை தன் வேலையை காட்டாமல் இருக்க வேண்டும்.
30ல் ஆடி 50 விக்கெட் ஆர்ச்சர் அபாரம்
குறைந்த ஒரு நாள் போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை நேற்றைய போட்டியில் அந்த அணியின் ஜோப்ரா ஆர்ச்சர் அரங்கேற்றினார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விழுந்த முதல் 3 விக்கெட்டுகளும் ஆர்ச்சர் வசம் வந்தன. இதன் மூலம் தனது 30வது ஒரு நாள் போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்ச்சர் சாதனை படைத்தார். இதற்கு முன், இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 31 போட்டிகளில் ஆடி 50 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக நீடித்து வந்தது. அந்த சாதனையை ஆர்ச்சர் நேற்று தகர்த்துள்ளார்.
The post சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்; துவம்சம் ஆன இங்கிலாந்து; ஆப்கன் 325 ரன் குவிப்பு appeared first on Dinakaran.