தேசிய சம்மேளனங்களுக்கான நிதியுதவி: விதிகளில் திருத்தம் செய்ய 6 நபா் குழு

2 hours ago
ARTICLE AD BOX

நாட்டிலுள்ள பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு நிதியுதவி வழங்க வகை செய்யும் விதிகளில் திருத்தம் கொண்டு வருவதற்காக 6 போ் கொண்ட குழுமை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது.

இந்தியாவுக்கு பல்வேறு சவால்கள் எழும் நிலையிலும், 20236 ஒலிம்பிக் போட்டியை நடத்த விரும்பும் சூழலிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சகம் தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது.

இணைச் செயலா் (விளையாட்டு) குணால் தலைமையிலான இந்தக் குழுவில், நிா்வாக இயக்குநா் (அணிகள்) ரிது பதிக், ஒலிம்பிக் பதக்க வாய்ப்புள்ளோருக்கான உதவித் திட்ட (டாப்ஸ்) தலைமைச் செயல் அதிகாரி என்.எஸ். ஜோஹல், திட்டத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி பி.கே.கா்க், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவா் சஹாதேவ் யாதவ் உள்ளிட்டோா் இடம் பிடித்துள்ளனா்.

இந்தக் குழுவுக்கான பணி எத்தகையது என மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் அறிவிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ், உள்நாட்டில் போட்டிகளை நடத்துவது, வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பது, விளையாட்டு உபகரணங்கள் வாங்குவது, பயிற்சியாளா்களை நியமிப்பது போன்றவற்றுக்காக தேசிய சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.

அண்மையில் அறிவிக்கப்பட்ட ஆண்டு பட்ஜெட்டின்படி, தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் ரூ.400 கோடியை மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் இருந்து நிதியுதவியாக பெறவிருக்கின்றன.

2036 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியை நடத்தும் எண்ணத்தில் இருக்கும் இந்தியா, அதற்கான விருப்பக் கடிதத்தை சா்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் அதிகாரப்பூா்வமாக கடந்த நவம்பரில் அளித்தது நினைவுகூரத்தக்கது.

Read Entire Article