ARTICLE AD BOX
மத்தியப் பிரதேச மாநிலம் காந்தி சாகர் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா பாய். இந்த நிலையில், கடந்த 2023 செப்டம்பரில் லலிதா பாய் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. அதே சமயத்தில் லாரி விபத்தில் உடல் நசுங்கி பெண் ஒருவர் உயிரிழந்த வீடியோ வெளியானது. இதனையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த டாட்டூவை பார்த்து இது லலிதா பாய்தான் என்று அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டியுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் இம்ரான், ஷாருக், சோனு, எஜாஸ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு தற்போதும் சிறையில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், லலிதா பாய் தற்போது உயிரோடு வீடு திரும்பியுள்ளது அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து லலிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர் போலீஸாரிடம், "ஷாருக் என்ற நபர் தன்னை ஒருவரிடம் ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்தார். அதன்பின்பு என்னை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிற்கு அழைத்துச் சென்றார்கள். செல்போன் இல்லாததால் எனது குடும்பத்தினரை தொடர்புகொள்ள முடியவில்லை. தற்போது அங்கிருந்து தப்பித்து வந்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு தனது குழந்தைகளுடன் மீண்டும் இணைந்த லலிதா பாய், தனது அடையாளத்தை உறுதிப்படுத்த தனது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை காவல்துறையிடம் கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் தகவல்களைக் கோரியுள்ளதாக ஜபுவா காவல் கண்காணிப்பாளர் (SP) பத்மவிலோச்சன் சுக்லா தெரிவித்தார். "முதலில் அந்தப் பெண்ணின் மருத்துவப் பரிசோதனை மற்றும் டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்வோம், மேலும் சாட்சிகளின் வாக்குமூலங்களையும் புதிதாகப் பதிவு செய்வோம். முழுமையான விசாரணைக்குப் பிறகுதான், இந்த மாத தொடக்கத்தில் காந்தி சாகர் காவல் நிலையத்தில் ஆஜரான பெண் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் அதே பெண்தான் என்பதை உறுதியாகக் கூற முடியும்" என்று சுக்லா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.