ARTICLE AD BOX
ஐஸ்லாந்தில் கல்வி மற்றும் குழந்தைகள் விவகார துறை அமைச்சராக இருந்தவர் ஆஸ்தில்டர் லோவா தோர்ஸ்டாட்டிர் (58). இவர், சமீபத்தில் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு தன்னுடைய இளவயது சம்பவங்கள் குறித்து பேசியிருந்தார். அதில், தன்னுடைய 22ஆவது வயதில், 15 வயது மாணவர் ஒருவருடன் உடலுறவு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். அவருடைய இந்தப் பேட்டி, இணையத்தில் வைரலாகி அவருக்கு எதிராகக் கடும் கண்டனங்களை குவித்தது. இதனால் ஆஸ்தில்டர் வகித்து வந்த அமைச்சர் பதவிக்கே நெருக்கடி வந்தது. இந்த சர்ச்சை தொடர்பாக பிரதமர் கிறிஸ்ட்ரூன், ஆஸ்தில்டரை அலுவலகத்துக்கு வரழைத்துப் பேசினார். இதன்பிறகு ஆஸ்தில்டர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தனது ராஜினாமாவுக்கு பின் பேசிய ஆஸ்தில்டர், "அது நடந்து 36 வருடங்கள் கடந்துவிட்டன, இப்போது நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. நான் அமைச்சராக இருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் மீண்டும் மீண்டும் எழுப்பப்படும். அரசாங்கத்தில் உண்மையில் ஒருபோதும் அமைதி இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
ஐஸ்லாந்தில், ஆசிரியர் அல்லது வழிகாட்டி போன்ற அதிகாரப் பதவியில் இருப்பவர்கள், 18 வயதுக்குட்பட்ட மைனருடன் பாலியல் உறவு கொள்வது சட்டவிரோதமானது. அத்தகைய குற்றத்திற்கு ஐஸ்லாந்தில் பொது தண்டனைச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதையடுத்து, இந்த விவகாரம் மீண்டும் அந்நாட்டில் சூடு பிடிக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.