போராட்டங்களே நம் மண்ணை மீட்கும்.. டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து குறித்து சு.வெங்கடேசன் எம்பி

4 hours ago
ARTICLE AD BOX

போராட்டங்களே நம் மண்ணை மீட்கும்.. டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து குறித்து சு.வெங்கடேசன் எம்பி

Madurai
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

மதுரை: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இது குறித்து கருத்த தெரிவித்துள்ள மதுரை எம்பி சு.வெங்கடேசன், "போராட்டங்களே நம் மண்ணை மீட்கும்" என்று கூறியுள்ளார்.

தனது x தளத்தில், "அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலத்தை உள்ளடக்கிய மதுரை மேலூரின் 2015.51 எக்டர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக ரத்து செய்திருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. வரவேற்கத்தக்க இச்செய்தி ஒன்றிய அரசின் தந்திரங்களை நம்பாது உறுதியுடன் போராடிய மதுரை மக்களுக்குக் கிடைத்த மகத்தான வெற்றி.

tungsten mining project su venkatesan arittapatti tungsten mine auction madurai central government

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-ன் கீழ் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்களின் 4வது ஏலத்தில் மதுரை மாவட்டம் மேலுர் தாலுகாவில் உள்ள டங்ஸ்டன் கனிமத் தொகுதியை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலத்தில் எடுத்ததாக கடந்த நவம்பர் மாதம் ஒன்றிய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

இச்செய்தி வெளியானவுடனாக இத்திட்டத்தால் தமிழர் வரலாற்றுப் பெருமைகள் குவிந்து கிடக்கும் மற்றும் உயிர்ப்பன்மைய முக்கியத்துவமிக்க பகுதிகள் அழியக்கூடிய அபாயம் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக இது தொடர்பான தகவல்களைத் திரட்டி 19.11.2024 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். 21.11.2024 அன்று டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு கடிதம் எழுதினேன். பின்னர் அவரை நேரில் சந்தித்தும் இத்திட்டத்தைக் கைவிடக்கோரி வலியுறுத்தினேன். 3.12.2024 அன்று நாடாளுமன்றத்தில் இத்திட்டத்தின் பாதகமான விளைவுகளை எடுத்துரைத்தேன்.

இந்த நிலையில் தமிழ் நாடு முதலமைச்சருக்குப் பதிலளித்த ஒன்றிய சுரங்க அமைச்சகம் இத்திட்டத்தை உரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றித் தொடருவோம் என உறுதிபடத் தெரிவித்தது. இதற்கிடையில் தமிழ் நாடு அரசு இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதை ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருந்தது.

ஆனால், இத்தனை முயற்சிகளுக்குப் பின்னரும் திட்டத்தைத் தொடர்வதில் ஒன்றிய அரசு உறுதியாக இருந்தது. அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 எக்டர் நிலப்பகுதியைத் தவிர்த்து 1800 எக்டர் அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.

ஒன்றிய அரசின் இந்த சூழ்ச்சியை மக்களிடம் தொடர்ந்து எடுத்துரைத்துப் பரப்புரை செய்தோம். ஒருபிடி மண்ணைக்கூட மேலூரில் இருந்து எடுக்க முடியாது என முழங்கினோம். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தோழர்கள் மூன்று நாட்கள் மகத்தான நடைபயண பிரச்சாரத்தை மேற்கொண்டனர். தொடர்ந்து மண்ணையும், மக்களையும் காக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் ஜனவரி 7 ஆம் தேதி 20 கி.மீட்டருக்கு மேல் நடந்தே சென்று போராட்டத்தை முன்னெடுத்தனர். திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளையும், தமிழக பா.ஜ.க.வின் மடைமாற்றும் உத்திகளையும் நம்பாமல் தமிழர் வரலாற்றுப் பெருமைகளையும், மக்களின் வாழ்வாதாரங்களையும் காக்கும் நோக்கில் மதுரை மக்கள் காட்டிய உறுதிப்பாடுக்கு முன் இன்று ஒன்றிய அரசு அடிபணிந்துள்ளது.

எப்படியாவது இத்திட்டத்தைச் செயல்படுத்தி இயற்கை வளங்களை வேதாந்தாவுக்குத் தாரை வார்க்கும் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை மக்களின் போராட்டம் உடைத்து நொறுக்கியுள்ளது.

டங்க்ஸ்டன் ஏல ஒப்பந்தத்தை வேதாந்தாவுக்கு எதிராக மட்டுமல்ல யாருக்கும் தரவிட மாட்டோம் என்னும் உறுதியும், ஒருபிடி மண்ணைக்கூட அள்ள விட மாட்டோம் என்னும் தீரமும் , ஏலத்தை முழுமையாக ரத்துச் செய்யும்வரை போராட்டம் தொடரும் என்கிற மக்களிம் நெஞ்சுரமும் இன்று ஒன்றிய அரசை ஆட்டிப் பார்த்திருக்கிறது. அதன் விளைவாகவே ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தை கைவிடுவதாக முழுமையாக அறிவித்துள்ளது. இது உறுதிமிக்க மக்கள் போராட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி. நமது வாழ்வையும், வரலாற்றையும் , வளத்தையும் பாதுக்காக்க நடைபெற்ற போராட்டத்திற்கு கிடைத்த தீர்க்கமான வெற்றி.

போராட்டங்களே நம் மண்ணை மீட்கும் . நம் மக்களைக் காக்கும். இந்தப் போராட்டத்தில் எந்த வேறுபாடுகளும் இல்லாமல் களம்கண்ட அனைத்து அமைப்புகள், விவசாய பெருமக்கள், சூழல் ஆர்வலர்கள் என எல்லோருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றி. இப்போதல்ல , எப்போது எந்த அரசும் எங்கள் வாழ்வையும், வளங்களையும் சூரையாட அனுமதிக்க மாட்டோம்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
English summary
The central government has announced that it will cancel the auction of the Aritapatti tungsten mine. Commenting on this, Madurai MP Su. Venkatesan said, “Only struggles will save our land.”
Read Entire Article