ARTICLE AD BOX
வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த இலட்சியம் இருக்கவேண்டும். இலட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ அவ்வளவு உயர்வாக வாழ்க்கையும் இருக்கும் என்பது உறுதி. உயர்ந்த லட்சியத்தை அடைய யார் எண்ணுகிறார்களே அவர்களால் அது முடியும் என்ற தருவாயில்தான் அப்படி ஒரு உயர்ந்த எண்ணமே உண்டாகும். சிலர் இந்த வருடத்திற்குள், இந்த தேதிக்குள் இதை நான் செய்து முடித்து காட்டுவேன் என்று கூறிவிட்டு கடுமையாக உழைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இலக்கை அடைய வேண்டும் என்று ஆசைப்படும் அளவிற்கு தன்னம்பிக்கையும், முயற்சியும் கொண்டு அழகாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் எடிசனின் தாயார்தான். மனிதன் கடன் பட்டிருப்பது மூளைக்கு அல்ல. முயற்சிக்கே.
கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார். மனிதனின் முயற்சியே அவற்றின் விலை என்னும் அற்புத வாக்கைக் கூறியவரும் எடிசனின் தாயாரே. அப்படி அவர் கூற காரணமாக இருந்த நிகழ்வு தாமஸ் ஆல்வா எடிசனை பள்ளி ஆசிரியர் எதற்கும் தகுதியற்றவர் என்று கூறிவிட்டதுதான்.
ஆனால் எடிசனின் தாயாரோ எடிசனை பெரிய ஆளாக்குவேன் என்னும் உறுதியோடு அவருக்கு பாடம் கற்பித்தார். அந்தத் தாயாரின் விடா முயற்சியாலும், உழைப்பாலும் எடிசன் உயர்வு பெற்றார். தாயின் கனவும் பலித்தது. எடிசனை நல்ல அறிவாளியாக்கி காட்டவேண்டும் என்ற லட்சியம் அவருக்கு இருந்தது. அது தன்னால் முடியும் என்று நம்பியதால்தான் அதை அர்ப்பணிப்பு உணர்வோடு அனுதினமும் தியானம்போல் செய்து பாடம் புகட்ட ஆரம்பித்தார்.
பகவான் ராமகிருஷ்ணரின் ஆசிரமத்தில் ஒரு விழாவிற்காக நூற்றுக்கணக்கில் லட்டுகள் செய்து அடுக்கி வைத்தனர். எறும்பு வந்தால் என்ன செய்வது என்று யோசித்தனர். பரமஹம்சர் லட்டு குவியலைச் சுற்றி சர்க்கரையால் வட்டம் போட்டார். அந்த எறும்புகள் சர்க்கரையை தின்று விட்டுப்போயின.
பரமஹம்சர் சொன்னார், 'மனிதர்களும் இப்படித்தான்! பெரிய லட்சியங்களை விட்டுவிட்டு சின்ன விஷயங்களிலேயே சமாதானமாகி விடுகின்றனர்!' சில்லரைக்காசுகள் சத்தமிடலாம். ரூபாய் நோட்டுகள் எப்போதும் அமைதியின் வடிவாய் காட்சியளிக்கும். எனவே சிறிய சிறிய விஷயங்களில் சிந்தனையைச் செலுத்திவிடாமல் பெரிய லட்சியங்களில் பேரறிவைச் செலுத்தி பேரின்பம் அடைவீர்களாக! என்று கூறினார். இதைத்தான் பெரிதினும் பெரிது கேள் என்று கூறுவது.
எனக்கு தெரிந்த ஒரு பெண்மணிக்கு ஒரு பெண் குழந்தை காலம் கடந்து பிறந்தது. அதற்கு பேச வராது. வாயில் நீர் வழிந்து கொண்டே இருக்கும். கால்களால் நடக்க முடியாது. கைகளால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அதைப் பார்த்த உறவினர்கள் இப்படி ஒரு குழந்தை உனக்கு வேண்டுமா? இதை வைத்துக் கொண்டு நீ எதை சாதிக்கப் போகிறாய்? என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த பெண்மணி இவளை நன்றாக வளர்த்து படிக்க வைத்த அவள் காலிலேயே அவளை நிற்கும்படி செய்து விடுவேன் அதுவும் ஒரு சாதனைதானே. செய்து காட்டுகிறேன் பார் என்று கூறி அதற்கான மருத்துவரை அணுகி தேடி கண்டுபிடித்து, அவளுக்கு வேண்டிய உடற்பயிற்சிகளை எல்லாம் செய்வித்து, படிக்க வைத்து, திருமணம் ஆகி குழந்தைக்கு தாயாகி பாலூட்டி சீராட்டி வளர்க்கும். அளவிற்கு அவளைக் கொண்டு வந்து நிறுத்தினார். இதுதான் வாழ்க்கை. இலக்கை எட்டிப் பிடித்த நிகழ்வு.
நார்மலாக பிறக்கும் ஒரு குழந்தையை ஒரு தாய் இதுபோல வளர்ப்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் குறைபாடுள்ள ஒரு குழந்தையை எல்லோர் போலும் சமுதாயத்தில் நடமாட வைத்துக் கொண்டு வருவதுதான் பெரிய சாதனை.
அதற்கு அர்ப்பணிப்பு உணர்வு, கடுமையான உழைப்பு, விடா முயற்சி எல்லாவற்றிற்கும் மேலாக கொண்ட லட்சியத்தை நிறைவேற்றும் துணிவு அனைத்தும் இருந்தால் தான் இதுபோல் நிகழ்த்தி சாதனை புரிய முடியும்.
ஆதலால்,
எதிலும் பெரிதினும் பெரிது கேளுங்கள்;
அதற்காக உழையுங்கள்;
உங்கள் இலக்கை ஒருபோதும் விட்டு விடாதீர்கள் .
உங்கள் வேலையை நேசியுங்கள். வெற்றி என்பது
நீங்கள் தொடர்ந்து கொடுக்கும் முயற்சியிலிருந்து மட்டுமே வருகிறது!