ARTICLE AD BOX
நம்முடைய அன்றாட உணவு வகைகளில் அரிசிக்கு முதலிடம் உண்டு. நாம் வழக்கமாக பயன்படுத்தும் வெள்ளை அரிசியை விட நம்முடைய பாரம்பரிய அரிசிகளை பயன்படுத்துவதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும். அப்படி நம்முடைய பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான குள்ளக்கார் அரிசியின் பயன்களை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குள்ளக்கார் அரிசி என்பது பாரம்பரியமான சிவப்பு அரிசி வகைகளில் ஒன்று. 80 முதல் 110 நாட்கள் வரையிலான காலகட்டங்களில் இவை முழுமையான விளைச்சலைக் கொடுக்கும். இவை வளர்வதற்கு குறைந்த அளவிலான நீரே போதுமானது. இருக்கும் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு குறைந்த கால கட்டங்களில் அதிக அளவிலான விளைச்சலை கொடுப்பதால் இந்த அரிசியை ஆண்டு முழுவதும் அறுவடை செய்யலாம்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது குள்ளக்கார் அரிசியில் ஜிங்க் மிகவும் அதிகம். இதனை அன்றாட உணவில் பயன்படுத்தும் போது உடலின் ரத்த ஓட்டம் சீராவதோடு மூளை மற்றும் நரம்புகளின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. குள்ளக்கார் அரிசியில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது. எனவே மலச்சிக்கல் தடுக்கப்பட்டு குடல் பகுதியின் இயக்கம் சீராக வைக்கப்படுகிறது. மேலும் இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது உடல் எடையானது தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.
குள்ளக்கார் அரிசியில் அதிக அளவிலான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளதால் இது ஃப்ரீ ரேடிகில்லை எதிர்த்து போராடுகிறது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதோடு மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவையும் தடுக்கப்படுகிறது. குள்ளக்கார் அரிசியை சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம். இதில் உள்ள அதிக புரதச்சத்தின் காரணமாக தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சியை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதோடு வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்க உதவுகிறது.
குள்ளக்கார் அரிசியில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச் சத்தின் காரணமாக எலும்பு வியாதிகளான ஆஸ்டியோ ஆர்த்ரோசைட்ஸ் மற்றும் ஆஸ்டியோபோராசிஸ் போன்ற நோய்கள் தடுக்கப்படுகிறது. மேலும் இதனை தொடர்ந்து பயன்படுத்தும் போது எலும்பின் அடர்த்தியை பராமரிக்க உதவுவதோடு ரத்த சோகையையும் தடுக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க உதவுகிறது.
குள்ளக்கார் அரிசியில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளதால் வளர் இளம் குழந்தைகளுக்கு இதனை தாராளமாக கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுவதோடு தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சியும் மேம்படுத்தப்படுகிறது. இதனை குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்களின் மூளையின் செயல்பாடு அதிகரிக்கப்பட்டு சுறுசுறுப்பாக இருப்பதோடு, முகத்தை பொலிவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
குள்ளக்கார் அரிசியை மற்ற அரிசிகளைப் பயன்படுத்துவதைப் போன்று இட்லி, தோசை, புட்டு, சாலட், வெண்பொங்கல், உப்புமா, பாயாசம் என பல்வேறு வகையான உணவுகளாக பயன்படுத்தலாம். மற்ற அரிசிகளைப் போல் குள்ளக்கார் அரிசி பட்டை தீட்டப்படுவதில்லை. எனவே, இதனை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது அதன் முழு பலன்களையும் அடையலாம்!
நீங்களும் இந்த பாரம்பரிய அரிசியை அடிக்கடி உணவில் சேர்த்து உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்!