ARTICLE AD BOX
பனிக்காலத்தில் நம்மில் பலருக்கு அடிக்கடி சளிப் பிடித்துக் கொள்ளும். சிலருக்கு சளி இன்னும் அதிகமாகி, இருமலுடன் கெட்டியாக சளி வெளியேறும். இந்தச் சளியை விரட்ட நம் சுற்றுப்புறங்களில் காணப்படும் ஒரு எளிய கீரை போதும் என்றால் ஆச்சரியமாக இருக்குதல்லவா? அப்படி ஒரு சிறந்த கீரை பற்றியும், நாம் அன்றாடம் குடிக்கும் டீயில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் சித்த மருத்துவர் சிவராமன் விளக்கியுள்ளார்.
ஹெல்த் பாஸ்கட் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்து இருப்பதாவது;
தேனீர் குடிக்க விரும்பினால், பால் சேர்க்காமல் குடிப்பது தான் சிறந்தது. அதுதான் முழுமையான சத்துக்களை வழங்கும். நீரை கொதிக்க வைத்து, அதில் தேயிலையை 2 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டிய பின்னர் குடிப்பது தான் சிறந்தது. தேவைப்பட்டால் தேன், பனங்கருப்பட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
வறண்ட நிலத்தில் காணப்படும் ஆவாரம் பூ, இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. சிறுநீரில் அதிக உப்பு வெளியேறினால் ஆவாரை டீ குடிப்பது சிறந்தது.
வள்ளலார் வணங்கிய மூலிகைக் கீரை கரிசலாங்கண்ணி. இருமல் வந்து சளியை கட்டியாக துப்புபவர்கள் கரிசலாங்கண்ணி சாறை நல்லெண்ணெய்யில் காய்ச்சி வைத்த கையாந்தைலம் குடித்தால் சளி பறந்து போகும். வைரஸூக்கு எதிரான ஆற்றல் கொண்டது கரிசலாங்கண்ணி.
இவ்வாறாக தினமும் ஒரே டீயை குடிக்காமல், தேனீர், ஆவாரம்பூ டீ, கரிசலாங்கண்ணி சாறு போன்றவற்றை மாறி மாறி குடித்து வந்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.