பெரியாரை தொட்ட சீமான்… டெபாசிட்டை இழந்த நாம் தமிழர் கட்சி!

2 hours ago
ARTICLE AD BOX

சீமான் பெரியார் குறித்து விமர்சனங்களை முன்வைப்பது தமிழக அரசியலில் தனது இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காகதான் என்றும், இடைத்தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் என்பது கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகதான் என்றும் பத்திரிகையாளர் ராம்கி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தோல்வி குறித்து பத்திரிகையாளர் ராம்கி, யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் திமுக எதிர்பார்த்த வெற்றிதான். ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என திமுக சொன்னது. தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர். அதுவே சிறப்பானதுதான். இதே சந்திரகுமார் தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பின்னர் அதிமுக, இறுதியாக காங்கிரஸ் வசம் வந்தது. தற்போது முதன்முறையாக திமுகவுக்கு வந்துள்ளது. சந்திரகுமார் தொகுதிக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர் ஆவார். இந்த தேர்தலில் பேசுபொருளாக இருந்தது சீமான் தான். அவருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பதுதான் பேசு பொருளாக இருந்தது. மற்றபடி திமுகவின் வெற்றி ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டு விட்டது. அவர்கள் நினைத்த மார்ஜினில் வெற்றி கிடைத்துவிட்டது. இந்த தேர்தலில் சீமானுக்கு 23 ஆயிரம் வாக்குகள் விழுந்துள்ளது என்பது நல்ல வாக்குதான். கிட்டத்தட்ட 14 சதவீத வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் – திமுக முன்னிலை

அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டின. சீமானும் அதையே முன்வைத்தார். இருந்தபோதும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெற்றதை விட கூடுதல் வாக்குகளை சந்திரகுமார் பெற்றுள்ளார். அதற்கு காரணம் தொகுதியில் அரசுக்கு எதிரான மனநிலை இல்லை. ஏற்கனவே இருந்த எம்எல்ஏக்கள் மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள். அதனால் புதிதாக வந்துள்ள திமுக தொகுதிக்கு எதாவது செய்வார்கள் என எதிர்பார்க்கின்றனர். ஒட்டுமொத்தமாக தமிழக அளவில் ஆளுங்கட்சிக்கு எதிரான சட்டம், ஒழுங்கு பிரச்சினையோ, தலித் பிரச்சினைகளோ பேசு பொருளாகவே உள்ளது. எந்த அளவிற்கு மக்கள் மனதில் கோபத்தையோ, அதிருப்தியையோ ஏற்படுத்தியுள்ளது என்பதை நம்மால் மதிப்பிட முடியாது. ஏனென்றால் இதனை மக்கள் மனதில் கொண்டுபோய் சேர்க்கும் வல்லமை கொண்ட கட்சிகள் திமுக கூட்டணியில் உள்ளதுதான். அவர்கள் பேச தொடங்கும்போது தான் இதன் தாக்கம் தெரியவரும். அதுபோல முக்கியமான கட்சிகள் திமுக கூட்டணியில் மவுனமாக இருப்பதால், இந்த விவகாரங்கள் எல்லாம் பேசு பொருளாகவோ உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நின்றிருந்தால் நாம் விமர்சனங்களை முன்வைத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் இந்தியா கூட்டணி என்று வராமல் பார்த்துக்கொண்டனர். ஈரோடு கிழக்கு தொகுதியின் அடிப்படையே திமுக Vs அதிமுக தான். இவர்கள் இருவருக்கும் 40 சதவீதம் வாக்குகள் உள்ளது. தேமுதிகவுடன், அதிமுக சேர்ந்தபோது 50 சதவீத வாக்குகளை பெற்றது. அதனால் திமுக, அதிமுகவை தவிர்த்து வேறு யார் வந்து நின்றாலும் கடுமையாக நெருக்கடியை தான் ஏற்படுத்தும்.

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது சரியான முடிவுதான். விக்கிரவாண்டி தொகுதியிலேயே அவர்கள் போட்டியிட்டிருக்க வேண்டும் என அனைவரும் சொல்கிறார்கள். அந்த களம் அவர்களுக்கு சாதகமாக இல்லாதபோது, தெரிந்தே தவறு செய்யக்கூடாது. அந்த வகையில் தேர்தலை அதிமுக புறக்கணித்தது சரியானதுதான். பாஜகவுக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை. தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி இருக்கிறதா? என்றே தெரியவில்லை. கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் பாமகவின் நிலைப்பாடு மாறிக்கொண்டே இருக்கிறது. பாஜக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு எந்த விஷயத்தையும் செய்ய தயாராக இல்லை. அதற்கான ஆதரவு தளமும் மிகவும் குறைவு. அதனால் பாஜக தேர்தலை புறக்கணித்தது சரிதான். ஒருவேளை இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டிருந்தால் திமுகவுக்கு மிகவும் எளிதான வெற்றியாக அமைந்திருக்கும். சீமான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டதுதான்.

சீமான் ஏன் திடீரென பெரியார் மீது பொங்கி எழுகிறார் என்றால் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காகதான். ஏனென்றால் விஜய் புதிதாக கட்சி தொடங்குகிறார். நாம் தமிழர் கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அளவில் பெரிய சேதாரம் ஏற்படுகிறது. அதில் இருந்து மீண்டு வருவதற்காக சில விஷயங்களை சீமான் யோசிக்கிறார். அப்போதுதான் உரக்க பேச தொடங்குகிறார். முதலில் அவரது நோக்கம் பெரியாரை விமர்சனப்படுத்துவதாக இருக்காது. அவர் சொல்லிதான் தொடங்கினார். பெரியாரை முன்வைத்து, பெரியாரின் பேரால் நடத்தப்படுகிற அரசியலை நான் எதிர்க்கிறேன் என்று சொல்லித்தான் தொடங்கினார். அதன் பிறகு வந்த எதிர்வினைகள் தான் அவரை கடுமையாக பேச வைத்தது. அதேபோல் நாம் தமிழர் கட்சியினரும் பேச தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தை பாஜகவின் பி டீம் என்று கொண்டு செல்லும்போது, அதை தவிர்ப்பதற்காக ஒரு ஆயுதத்தை கையில் எடுக்கிறார். அதுதான் பிரபாகரன் ஆதரவு. அப்போது,தான் உண்மையான பெரியார் அமைப்புகளிடம் இருந்து ஆவேசமான எதிர்வினை கிளம்பியது. அப்போது தான் பெரியார் vs  பிரபாகரன் என்ற விவாதம் வந்தது பெரிய திருப்புமுனையாகும். இது முடிவில்லாத விவாதமாகும்.

சீமான், இதை கையில் எடுத்தால்தான் அவர் மீது பாஜக சாயம் பூசப்படாமல் இருக்கும். ஏனென்றால் பிரபாகரன் ஆதரவு நிலைப்பாட்டை பாஜக எப்போதும் எடுக்காது. தான் பிரபாகரன் ஆதரவில் உறுதியாக உள்ளேன் என்பதை உறுதிப்படுத்த தான் இதனை கையில் எடுத்துள்ளார். இந்த விஷயம் இந்த தேர்தலோடு முடிந்துவிடாது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரோடு மேப் போட்டது போன்றது போலதான் உள்ளது. இதன் மூலம் பெரிய அளவில் வெளிச்சம் கிடைக்கிறது. இது தேர்தல் அரசியலில் எடுபடுமா என்பது இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் தன்னுடைய இருப்பை காப்பாற்றி கொள்வதற்காக இதை செய்ய வேண்டி உள்ளது என்னும்போது நிச்சயமாக அதை தொடர்ந்து செய்வார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Read Entire Article