பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (BEL) பணிபுரியும் இந்தியர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் மத்திய புலனாய்வு அமைச்சகம் வியாழக்கிழமை அன்று அவரை கைது செய்துள்ளது. மாநில, மத்திய மற்றும் ராணுவ புலனாய்வு அமைப்புகள் இணைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் தீப் ராஜ் சந்திரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ப்ராடக்ட் டெவலப்மெண்ட் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
குற்றம் சாட்டப்பட்ட தீப் ராஜ் பெங்களூரில் உள்ள மட்டிகேரே பகுதியில் வசித்து வருகிறார். தீப் ராஜ் சந்திரா உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்தவர். பணி புரிவதற்காக பெங்களூருவிற்கு குடி பெயர்ந்துள்ளார். அவரைப் பற்றிய பிற தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம்.. ஒரு பொதுத்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணுவியல் நிறுவனம் ஆகும். பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தில் விண்வெளி பயன்பாடுகளுக்கு தேவைப்படும் டிஜிட்டல் தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பெல் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 16 பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும்.
தீப் ராஜ் மட்டுமின்றி மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்புப் படையினர் புதன்கிழமை அன்று கான்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் இருந்து ஒரு ஜூனியர் பணி மேலாளரை கைது செய்தனர். முக்கியமாக கைது செய்யப்பட்ட நபர் பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்த ஒருவரிடம் ரகசியமாக தகவல்களை பகிர்ந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார்.
மார்ச் 14-ஆம் தேதி உத்தரப்பிரதேச பயங்கரவாத எதிர்ப்பு படையினர் ரவீந்திர குமார் என்ற வெடி மருந்து தொழிற்சாலை ஊழியரை கைது செய்தனர். அவரும் பாகிஸ்தானை சேர்ந்த நபருடன் ரகசியமாக தகவல்களை வழங்கியது தெரியவந்தது. இவர் லக்னோவில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் கார்வார் கடற்படை தொடர்பான முக்கியமான தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதாக தான் இந்த இருவரையும் கைது செய்தனர். இந்தியாவின் முக்கிய கடற்படை தளத்தின் தகவல்களை பாகிஸ்தானுக்கு கசியவிடப்பட்ட சம்பவம், நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் ஊழியர்கள்.
கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் கர்நாடகாவின் முடுகா கிராமத்தைச் சேர்ந்த வேதனா தண்டேல் மற்றும் கர்நாடகாவின் கார்வார் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷய் நாயக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் முக்கியமாக ஹனி டிராப்பிங் என்று சொல்லப்படும் பெண்களை பயன்படுத்தி ஆண்களை மயக்கி தகவல்களை பெறும் முறையை பயன்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஏனெனில் ஒரு பெண் பாகிஸ்தான் உளவாளி குற்றம் சாட்டப்பட்ட இருவரின் தனிப்பட்ட தகவல்களையும் சேகரித்து 2023-ஆம் ஆண்டில் பேஸ்புக்கில் அவர்களுக்கு ரெக்வஸ்ட் அனுப்பியதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கார்வார் கடற்படை தளத்தின் புகைப்படங்கள் மற்றும் கடற்படை நகர்வுகள் பற்றிய விவரங்களை பாகிஸ்தானுக்கு பணத்திற்காக அனுப்பி இருக்கின்றனர்.
இப்படி தொடர்ந்து தகவல்களை வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு பலர் இந்தியாவில் கைது செய்யப்படுவது வேதனை அளிக்கும் விஷயமாக மாறி உள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. 2023-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக இந்த நெட்வொர்க்-இன் பின்னணி குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இன்னும் யாரெல்லாம் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன்னிறுத்தி கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும். அதோடு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டிய வேண்டியது அவசியம்.