கர்நாடகாவில் மார்ச் 22, 2025 (சனிக்கிழமை) அன்று 12 மணி நேரத்திற்காக முழு அடைப்பு (பந்த்) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம், பெலகாவியில் நடந்த மொழி மோதல் சம்பவம். கர்நாடக மாநிலப் போக்குவரத்து கழகத்திற்குச் (KSRTC) சொந்தமான ஒரு பேருந்து நடத்துனரை மராத்தி ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த சம்பவத்தைக் கண்டித்து, கர்நாடக ஒக்கூட்டா (Kannada Okkoota) என்ற கன்னட ஆதரவு அமைப்பு இந்தப் பந்தை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பந்த் கர்நாடகா முழுவதும் நடைபெற உள்ளதால், பெங்களூரு உட்பட பல பகுதிகளில் பொது மற்றும் தனியார் சேவைகள் பாதிக்கப்படலாம்.

கர்நாடகா முழுவதும் இந்தப் பந்த் கடைப்பிடிக்கப்படும். பெங்களூரு, மைசூர், ஹுப்பளி, பெலகாவி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. பெலகாவியில், கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகத்திற்குச் (KSRTC) சொந்தமான ஒரு பேருந்து நடத்துனரை மராத்தி ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த நடத்துனர் மராத்தியில் பேச மறுத்ததால் இந்தத் தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே நீண்ட காலமாக உள்ள மொழி மற்றும் எல்லை பிரச்சினையை மீண்டும் தீவிரமாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, கர்நாடகா முழுவதும் கன்னட ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக ஒக்கூட்டா மற்றும் பல கன்னட அமைப்புகள், மராத்தி ஆதரவு குழுக்களுக்கு தடையை விதிக்க வேண்டும் எனவும், பெலகாவியில் கன்னட பேசும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
முழு பந்த் காரணமாக பெங்களூருவில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், இதுவரை அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. சில கல்வி நிறுவனங்கள் online classes நடத்தலாம். அதே நேரத்தில், சில இடங்களில் மாணவர்கள் தேர்வுகள் இருப்பதால், பள்ளிகள் இயங்க வாய்ப்பும் உள்ளது. இந்த பந்த் காரணமாக பேருந்து, ஆட்டோ, கேப் சேவைகள் போன்ற போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்.
கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் (KSRTC) மற்றும் பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம் (BMTC) ஊழியர்கள் முழு பந்திற்கு ஆதரவளித்துள்ளனர். எனவே, பேருந்து சேவைகள் இயங்க வாய்ப்பு குறைவு. ஓலா, ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் இந்தப் பந்திற்கு ஆதரவளித்துள்ளதாக தகவல். எனவே, இந்த சேவைகளும் பாதிக்கப்படும். பெரும்பாலான ஆட்டோ சங்கங்கள் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், ஆட்டோ சேவைகளும் குறையும்.
மருத்துவமனைகள், அவசர அம்புலன்ஸ் சேவைகள், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை சேவைகள் இயங்கும்.பந்தால் பொதுமக்கள் அவசர மருத்துவ உதவிகளை பெற முடியாமல் போகக் கூடாது என்பதால், மருத்துவமனைகள் வழக்கம்போல் இயங்கும். அம்புலன்ஸ், மருத்துவ ஊழியர்கள், ஊரக சுகாதார மையங்கள் வழக்கம்போல் செயல்படும். பெரும்பாலான உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும். சில திரையரங்குகள் பந்திற்கு ஆதரவளிக்கின்றன, எனவே புதிய படங்கள் வெளியீடு தாமதிக்கலாம்.
அரசு அலுவலகங்கள் இயங்கலாம், ஆனால் போக்குவரத்து பாதிப்பு காரணமாக ஊழியர்கள் வருகை குறையலாம். சில தனியார் நிறுவனங்கள் Work From Home முறையில் செயல்படலாம். வங்கிகள் வழக்கம்போல் செயல்படும், ஆனால் ஊழியர்கள் பங்கேற்க முடியாத காரணத்தால் சேவைகள் பாதிக்கப்படலாம். ஏ.டி.எம்-களில் பணம் போதுமான அளவில் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
பெலகாவி போன்ற எல்லைப்பகுதிகளில் கன்னட பேசும் மக்களை பாதுகாக்க வேண்டும். மராத்தி ஆதரவு அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். பெங்களூருவை பல்வேறு நிர்வாக மண்டலங்களாகப் பிரிப்பதை நிறுத்த வேண்டும். கர்நாடகாவின் பெலகாவி, கார்வார், நிப்பானி ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் மராத்தி மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். 1960-ல் மகாராஷ்டிரா உருவானபோது, இந்த பகுதிகளை தங்களுடன் இணைக்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு கோரிக்கை வைத்தது. கர்நாடக அரசு இதை மறுத்ததால், மொழி மோதல் மற்றும் எல்லை பிரச்சனை தொடர்ந்து தொடர்கிறது.
மொழி மற்றும் எல்லை பிரச்சனை தொடர்பாக அரசு தீர்வு காணுமா? என்பது எதிர்காலத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாக இருக்கும்.