ARTICLE AD BOX
லகு வஜ்ராசனம் என்பது பின்னோக்கி வளைந்து செய்யும் யோகா போஸ் ஆகும். ஆனால் இந்த ஆசனம் செய்வது மிகவும் சவாலானது என்பதால் நேரமும், பொறுமையும் மிகவும் அவசியம். லகு வஜ்ராசனம், லிட்டில் தண்டர்போல்ட் போஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
நன்மைகள் :
* இந்த ஆசனம் செய்வதன் மூலம் மன அழுத்தம், மனச்சோர்வு, பதட்டம் குறையும் .
* தொடைகள், முதுகு, இடுப்பு, மார்பு, கைகள், கழுத்து மற்றும் தோள்களின் தசைகளை பலப்படுத்துகிறது.
* முழங்கால்களைப் பிடிக்க கைகளை பின்னால் நீட்டும் போது, விலா எலும்புக் கூண்டு, மார்பு மற்றும் முன் வயிற்றுத் தசைகளைத் திறந்து மேலும் நீட்டிக்க ஊக்குவிக்கிறது. நுரையீரல் மற்றும் வயிற்று உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.
* மார்பு மற்றும் இடுப்பு பின்னோக்கி வளையும் போது நன்றாக நெகிழ்வுத்தன்மை அடைவதால் தொப்பை குறையும். மார்பக தொய்வை போக்கி எடுப்பான மார்பகம் அமையும்.
* முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்கம் மற்றும் கால்களில் வலிமையை மேம்படுத்த உதவுகிறது.
* முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டுகளில் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்க வரம்பை மேம்படுத்துகிறது. மூட்டுவலி மற்றும் மூட்டு தேய்மானத்தை தடுக்க உதவுகிறது.
செய்முறை :
யோகா மேட்டில் முழங்காலில் நிற்கவும். உங்கள் முழங்கால்களை இடுப்பு தூரம் (அதாவது ஒரு அடி) அகலமாகவும், தொடைகள் தரையில் செங்குத்தாக இருக்கும்படியும் தரையில் மண்டியிடவும். உங்கள் கைகளை உங்கள் தொடைகளில் வைக்கவும். உங்கள் இடுப்பு மற்றும் தொடைகளை முன்னோக்கி தள்ளும் போது மெதுவாக பின்னால் சாய்ந்து உங்கள் கைகளால் உங்கள் கணுக்கால்களை பிடித்து கொள்ளவும்.
இப்போது மிகவும் பொறுமையாக பின்னோக்கி சரிந்து தலையால் தரையை தொட (படத்தில் உள்ளபடி) முயற்சிக்க வேண்டும். இந்தநிலையில் உங்கள் இடுப்பு, மார்பு மேலே மற்றும் முன்னோக்கி இருக்கும்.
உங்கள் மூட்டுகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஆசனம் பழகப்பழக தேவையான பலம் காலப்போக்கில் வந்து விடும்.
இந்த நிலையில் 15 விநாடிகள் முதல் 1 நிமிடம் வரை இருந்த பின்னர் மெதுவாக பழைய நிலைக்கு வரவேண்டும். ஆரம்பத்தில் சிறிது நேரம் இருந்தால் போதுமானது.
உடல் நிலையில் இந்த போஸ் தொண்டை (விசுத்த) சக்ரா, மூன்றாவது கண் (அஜ்னா) சக்ரா மற்றும் கிரீடம் (சஹஸ்ராரா) சக்ரா ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் சக்கரங்களை செயல்படுத்த உதவுகிறது.
முரண்பாடுகள் :
இந்த ஆசனம் செய்யும் போது மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாவும், பொறுமையாகவும் செய்ய வேண்டும். மேலும் செய்யும் போது ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் ஆசனம் செய்வதை நிறுத்தி விடவும். யோகா ஆசிரியரின் மேற்பார்வையில் மட்டுமே இந்த ஆசனம் செய்வது பாதுகாப்பானதாகும்.
* கணுக்கால், முழங்கால்கள், இடுப்பு, முழங்கைகள், தோள்கள், கழுத்து, முதுகுத்தண்டு அல்லது விலா எலும்புக் கூண்டு ஆகியவற்றில் ஏதேனும் காயம் அல்லது உடலின் எந்தப் பகுதியில் உள்ள தசைநார் தொடர்பான காயம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்ப்பது நல்லது.
* வயிற்றில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் தவிர்க்க வேண்டும்.
* பலவீனமான தசைகள் அல்லது சுவாசம் அல்லது பொது ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய எந்தவொரு உடல் நிலை உள்ளவர்களும் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
* தலைவலி, பலவீனமான முதுகு (ஹெர்னியேட்டட் டிஸ்க்), கண் அல்லது காது தொற்று, கழுத்து வலி, பிரசவத்திற்குப் பின் 8+ வாரங்கள் ஆகாதவர்கள் அல்லது உடலின் ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.
* முதுகு, மூட்டு, கழுத்து வலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்ப்பது நல்லது.