பெங்களூரு: இந்தியாவில் ஸ்டார்ட்அப் தலைநகரம், ஐடி நகரம் என பெயர் பெற்றிருக்கும் பெங்களூரு போக்குவரத்து நெரிசலின் தலைநகரம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. அந்த அளவிற்கு பெங்களூரு நகரின் அனைத்து பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
அவ்வப்போது பெங்களூரு போக்குவரத்து நெரிசல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலர் வெளியிடக்கூடிய பதிவுகள் வைரலாகும். அந்த வகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான மோகன்தாஸ் பை பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்து கிண்டலாக வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை குறிப்பிடும் வகையில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் மோகந்தாஸ் பை பெங்களூரில் அறிமுகமாகி இருக்கும் புதிய வகையான சுற்றுலா இதற்கு பெயர் தான் பெங்களூரு டிராபிக் சுற்றுலா என கூறியுள்ளார். நான்கு பகல், மூன்று இரவு கொண்ட பெங்களூரு டிராபிக் டூரிசம் பேக்கேஜ் என அவர் கிண்டலாக பதிவு செய்துள்ளார்.
அதில் பெங்களூருவில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் காணப்படும் அவுட்டர் ரிங் சாலை, சில்க் ரோடு சந்திப்பு , மராத்தஹள்ளி மற்றும் ஹெச்எஸ்ஆர் லேஅவுட் ஆகியவற்றை குறிப்பிட்டு நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்கள் இவை எனக் கூறியுள்ளார்.
அவருடைய இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் பெங்களூரு மக்கள் இந்த போக்குவரத்து நெரிசலால் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறோம், என்ன செய்வது நம்முடைய அரசுக்கு நம் மீது எந்த ஒரு கவனிப்பும் இல்லை இது போன்ற சமயங்களில் இப்படி ஜோக் எடுத்து தான் நாம் நம்மை தேற்றிக்கொள்ள வேண்டும் என அதில் கூறியிருக்கிறார்.
அவருடைய இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஒரு பயனர் துரதிஷ்டவசமாக இந்த சுற்றுலா போக்குவரத்து நெரிசல் காரணமாக நிறுத்தப்படுகிறது என மெசேஜ் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என கிண்டலாக பதிவு செய்துள்ளார். அரசு மக்கள் தொகை அதிகரித்ததற்கு ஏற்ப சாலை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் விட்டதே இந்த பிரச்சனைக்கு காரணம் எனக் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் அமையும் எந்த ஒரு அரசுக்கும் மக்கள் மீது கவலை இல்லை என ஒரு பயனர் தெரிவித்துள்ளார். இருந்தாலும் சிலர் மோகன் தாஸ் பை குறித்து விமர்சனமும் எழுப்பியுள்ளனர். மோகன் தாஸ் பை பெங்களூரிலேயே வசிக்கிறார் ஆனால் எப்பொழுதுமே பெங்களூரு குறித்து எதிர்மறையாகவே சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறார் என அவரை விமர்சனம் செய்துள்ளனர்.