பூமிக்கு திரும்பினார் இந்திய திருமகள்

7 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியதை உலகமே, கொண்டாடி வருகிறது. ஆனால் மற்றவர்களைவிட இது இந்தியாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவில் பிறந்திருந்தாலும், ஒரு இந்தியரின் மகள். அவருடைய தந்தை குஜராத் மாநிலத்தை சேர்ந்த தீபக் பாண்டியா. தாயார் உர்சுலின் போனியா, சுலோவேனியா நாட்டை சேர்ந்தவர். சுனிதா வில்லியம்ஸ் பொறியியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்று அமெரிக்க கப்பல்படையில் பணியாற்றினார். 1998-ல் நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு விண்வெளி வீராங்கனையானார்.

ஏற்கனவே 2 முறை சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் சென்று, 192 நாட்கள் அங்கு இருந்திருக்கிறார். 3-வது முறையாக கடந்த ஆண்டு ஜூலை 15-ந்தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றார். அப்போது அவர் தன்னுடன் இந்தியாவின் உணவான சமோசாவையும், சுலோவேனியா நாட்டின் தேசிய கொடியையும் எடுத்துச்சென்றார். அவருடன் புட்சு வில்மோர் என்ற மற்றொரு விண்வெளி வீரரும் சென்றார். அவர்கள் விண்வெளி நிலையத்துக்கு சென்ற நேரத்தில், அங்கு ஏற்கனவே 5 பேர் இருந்தனர்.

சுனிதா வில்லியம்ஸ், 8 நாட்களில் பூமிக்கு திரும்பிவிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் திரும்பவேண்டிய விண்கலத்தில் பழுது ஏற்பட்டதால், அங்கேயே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நமக்கெல்லாம் அவர் திரும்பவில்லையே, எப்போது வருவார் என்று மனம் பதைபதைத்தது. ஆனால் சுனிதா வில்லியம்ஸ் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது அன்றாட பணிகளில் கவனம் செலுத்திவந்தார். உடற்பயிற்சி செய்வது, சாப்பிடுவது போன்ற வீடியோக்களை தினமும் வெளியிட்டு வந்தார். அவரது இந்த திடமான மன உறுதிதான் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

59 வயதான சுனிதா வில்லியம்ஸ், அந்த விண்வெளி நிலையத்தின் தலைமை பொறுப்பை ஏற்று அந்த குழுவை வழி நடத்தியதோடு மட்டுமல்லாமல், அங்கு பல ஆராய்ச்சிகளையும், குறிப்பாக விண்வெளியில் பயிர் விளைவிக்கும் ஆராய்ச்சியிலும் மிக தீவிரமாக ஈடுபட்டார். விண்வெளி வாழ்க்கை என்பது கால்தடத்தை தரையில் பதித்து வாழும் வாழ்க்கையல்ல. அது மிகவும் கடினமானது. எப்போதும் மிதந்து கொண்டுதான் இருக்கவேண்டும். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ், நேற்று அதிகாலை 3.27 மணிக்கு பூமியில் கால் தடம் பதித்து எல்லோருடைய உள்ளத்தையும் துள்ளிக்குதிக்க வைத்துவிட்டார். அவருடன் மேலும் 3 பேரும் பூமிக்கு திரும்பியுள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதை அவரது சொந்த ஊரான குஜராத் மாநிலம் மெக்சனா மாவட்டம் ஜூலாசன் பகுதியில் பொதுமக்கள் இரவு முழுவதும் விழித்திருந்து நேரலையில் பார்த்தனர். பூமிக்கு வெற்றிகரமாக வந்த உடன் சுனிதா வில்லியம்சின் உறவினர்கள், ஊர்பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சுனிதா வில்லியம்ஸ் விண்கலம் பூமிக்குள் நுழைந்தவுடன், அதோடு இணைக்கப்பட்ட பாராசூட் விரிந்து கடலில் வந்து இறங்கியது. விண்கலத்தில் இருந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர் உடனே வீட்டுக்கு திரும்ப முடியாது. பல்வேறு உடல் பரிசோதனைகளில் வெற்றி பெறவேண்டும். அவரது உடல் பூமியில் வாழ்வதற்கு ஏற்றவகையில் சீரான நிலையில் இருக்கவேண்டும். விண்ணில் இருந்து புறப்படுவதற்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி, சுனிதா வில்லியம்சுக்கு எழுதிய கடிதத்தில் இந்திய மக்களின் வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறார்கள் என்று சொன்னதுதான் ஒவ்வொரு இந்தியரின் உணர்வாக இருக்கிறது.


Read Entire Article