ARTICLE AD BOX
நீயா நானா விவாத நிகழ்ச்சியில் பாஜகவினர் கருத்தில்லாமல் சென்று தோற்றுவிட்டு வந்து, பின்வாசல் வழியாக சென்று அதனை முடக்கியுள்ளார்கள் என்று விடுதலை சிறுதைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய் டிவியில் மும்மொழி கொள்கை தொடர்பான விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படாததன் பின்னணி குறித்து விடுதலை சிறுதைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- விஜய் டிவி ஒன்றும் திமுகவின் ஊடகம் கிடையாது. நீயா நானா நிகழ்ச்சியும் வழக்கமான நிகழ்ச்சி கிடையாது. அது முழுக்க முழுக்க வெகுஜன மக்களிடையே பெரிய வீச்சை ஏற்படுத்திய நிகழ்ச்சியாகும். தமிழக ஊடகக் களத்தில் நீண்ட காலமாக தொடர்கிற ஒரு நிகழ்ச்சியுமாகும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுபோன்று இத்தனை ஆண்டுகள் செல்லும் ஒரு நிகழ்ச்சியை தமிழ் ஊடகங்களில் நீங்கள் பார்க்க முடியாது. அதற்கு காரணம் நீயா நானா நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கமே ஆகும். அந்த நிகழ்ச்சியின் வாயிலாக கோபிநாத் ஒரு ஆளுமையாக அறியப்பட்டு, இன்று ஊடகத்துறையில் உச்சத்திற்கே சென்றுள்ளார். இதெல்லாம் நீயா நானா நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கே காரணமாகும். அந்த நிகழ்ச்சி ஒரு சார்பான நிகழ்ச்சியாக இருந்திருந்தால் இந்த இடத்தை பிடித்து இருக்காது. மக்களால் கொண்டாடப்பட்டிருக்காது. அது சார்ந்தவர்கள்தான் அதை கொண்டாடி இருப்பார்கள். ஆனால் ஒட்டுமொத்த மக்களும் ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள், விரும்புகிறார்கள். அந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடியவர்களிடம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஒரு சார்பு இருந்தால் இந்த வரவேற்பு எப்படி இருக்கும். எந்த சார்பும் இல்லாமல். உள்ளதை உள்ளபடி இரு தரப்பையும் வைத்து பேசி, ஒரு கருத்தை சமூகத்தில் பதிய வைக்கிறது என்பதால்தான் அந்த நிகழ்ச்சிக்கு சமுதாயத்தில் மரியாதை உள்ளது.
நீயா நானா நிகழ்ச்சியில் இதற்கு முன்பாக பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் பேசு பொருளாக இருக்கக்கூடிய மும்மொழி கொள்கை என்ற கருத்தை எடுத்து விவாதித்துள்ளனர். இரு தரப்பிலும் விருந்தினர்களை அழைத்திருக்கிறார்கள். இது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தெரியும். நான் நீயா நானா நிகழ்ச்சியில் பலமுறை சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருக்கிறேன். கருத்தாளராகவும் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல்தான் இந்த நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்துள்ளனர். இரு பக்கமும் சமநிலையில் கருத்தாளர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். இரண்டு கருத்துக்களும் சம அளவில் விவாதிக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் இதைதான் சொல்லுகிறார்கள்.
இதில் பாஜகவுக்கு என்ன பிரச்சினை?. மும்மொழி கொள்கையை ஆதரிப்பவர்களுக்கு என்ன பிரச்சினை என்றால் விஜய் டிவி போன்ற ஊடகத்தில், வெகு மக்களால் அதிகம் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியில் மும்மொழி குறித்த விவாதம் வருகிறபோது, மும்மொழி குறித்த காத்திரமாக எந்த தரவுகளையும், ஆதாரங்களையும் அதனை ஆதரிப்பவர்களால் வைக்க முடியாது. அவர்களிடம் சொல்வதற்கான பாயிண்ட்ஸ் கிடையாது. ஆனால் எதிர் தரப்பு வாதம் கடுமையாக இருந்திருக்கும். இந்தியை, மும்மொழி கொள்கையை ஆதரித்து அறிவுப்பூர்வமான வாதங்களை வைக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் இந்தி திணிப்பு தானே செய்கிறார்கள். திணிக்கக்கூடியவர்களால் நியாயமான கருத்துக்களை கூற முடியாது. அவர்கள் உள்வாங்கி இருக்கக்கூடிய, தங்களுடைய மண்டையில் ஏற்றப்பட்டிருக்கும் விஷயங்களைத்தான் மீண்டும் மீண்டும் சொல்வார்கள்.
அந்த இடத்தில் இருமொழி கொள்கையை ஆதரிப்பவர்கள் ஆதாரப்பூர்வமான தகவல்களை சொல்வார்கள். தர்க்க ரீதியான கேள்விகளை கேட்பார்கள். இதனை பார்க்கக்கூடிய மக்கள், மும்மொழி கொள்கை தவறானது என்று முடிவுக்கு வந்துவிடுவார்கள். தமிழ்நாடு ஏன் இரு மொழி கொள்கையை பின்பற்றுகிறது. ஏன் ஆங்கிலமும், தமிழும் என்பதில் தெளிவாக உள்ளது. அதன் மூலம் தமிழ்நாடு எவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது எனறு 2 பக்க வாதங்களை வைத்தே மக்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். அப்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகினால் மிகப் பெரிய பின்னடைவாக அமையும் என்று அவர்களுக்கு புரிந்திருக்கிறது.
நீயா நானாவில் எப்போதும் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்த பின்னர், அது ஒரு சார்பாக வந்துவிட்டது என்று பதிவு செய்தவர்கள் நிகழ்ச்சியை நிறுத்த மாட்டார்கள். ஏனென்றால் இரு தரப்பையும் அழைத்துள்ளோமா? இரு தரப்புக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளோமா? என்றுதான் அந்த நிறுவனம் பார்க்குமே தவிர, இரண்டு தரப்பில் ஒரு வெற்றி பெற்றுவிட்டார். மற்றொருவர் பின்வாங்கி விட்டார் என்பது அந்த நிறுவனத்தின் பிரச்சினை கிடையாது. அது தோற்றவர்களின் பிரச்சினையாகும். அந்த இடத்தில் போய் கருத்தை சொல்ல முடியவில்லை அல்லது கருத்து இல்லை என்னறால் நிறுவனமா பொறுப்பு? அதற்கு எப்படி விஜய் டிவி, நீயா நானா பொறுப்பாக முடியும். நீயா நானாவில் உனக்கு வாய்ப்பு கொடுத்தார்களா என்றுதான் நாம் நீங்கள் பார்க்க வேண்டும். அவர்களும் பார்க்க வேண்டும். அவர்கள் மீது ஒரு பழி வந்தால்கூட என்ன சொல்வார்கள், இரு தரப்பை விருந்தினர்களையும் அழைத்திருந்தோம். சமனிலையோடு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறோம். உங்களிடம் சொல்வதற்கு உங்களிடம் கருத்து இல்லை என்றால், நாங்கள் என்ன செய்வது என்றுதான் கேட்பார்கள். அப்போது நீயா நானாவை நிறுவனம் நிறுத்தவில்லை. நிறுவனம் நிறுத்த வைக்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சி இரு மொழி கொள்கையின் பக்கம் வலிமையாக இருந்ததாக உணரப்பட்டதால், அது வெளியே வந்தால் நமது நிலைப்பாடு அம்பலப்பட்டு விடும். இரு மொழி கொள்கை ஆதரவு என்பது மக்கள் மத்தியில் நிறுவப்பட்டு விடும். அதனால் இது வராமல் தடுப்பதுதான் நாம் தப்பித்துக்கொள்வதற்கான ஒரே வழி என்று எண்ணி, நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு போனவர்கள் சொல்லி இருப்பார்கள்.

இன்றைக்கு மத்திய அமைச்சராக இருக்கும் எல்.முருகன் கட்டுப்பாட்டில் தான் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உள்ளது. பொதிகை தொலைக்காட்சியின் பெயரை மாற்றி முழுக்க முழுக்க ஆர்எஸ்எஸ் – பாஜவின் அபிஷியல் டிவி போல மாற்றி விட்டார்கள் அல்லவா? ஊடகங்களை அவர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்று நமக்கு தெரியும். ஊடகங்களுக்கு எப்படிப்பட்ட நெருக்கடி கொடுப்பார்கள் என்றும் நமக்கு தெரியும். தனியார் தொலைக்காட்சியில் ஒரு விவாதத்தை நடத்தியதற்காக வெடிகுண்டு வீசியவர்கள் பாஜகவினர். அதேபோல் எத்தனை விவாதங்களில் சென்று கலவரம் செய்திருக்கிறார்கள். அண்மையில் மதிவதனிக்கு நேர்ந்த நிலைமை என்ன என்று பார்த்தோம். கோவையில் இயக்குநர் அமீரை இதேபோல்தான் நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக ஊடக விவாத நிகழ்ச்சியில் கருத்தில்லாமல் சென்று தோற்றுவிட்டு வந்து, பின்வாசல் வழியாக சென்று முடக்கியுள்ளார்கள். மும்மொழி கொள்கை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதன் காரணமாக மக்கள் நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமுடன் உள்ளனர். இதனால் மற்ற தொலைக்காட்சிகள் இதுபோன்ற விவாத நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.