ARTICLE AD BOX
தனது மெல்லிய இசையால் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது தந்தை தன் மகனை பாடகராக்க வேண்டும் என நினைத்தார். ஆனால் 12வது வயதிலேயே இசை தான் தனக்கு எல்லாமே என்று தேர்ந்தெடுத்து விட்டார் ஹாரிஸ். முதலில் கிட்டாரை வாசிக்கப் பழகி, பின்னர் கீபோர்டு, பியானோ மற்றும் பல இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார். தமிழ்த் திரையுலகில் தனது மெலடி பாடல்கள் மூலம் பிரபலமான ஹாரிஸ் ஜெயராஜ், ஒருவருக்கு இருப்பதிலேயே மோசமான கெட்டப் பழக்கம் எது என சமீபத்தில் தெரிவித்தார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு மின்னலே படத்தின் மூலம் இசையமைப்பாளராக கோலிவுட்டில் நுழைந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். முதல் படத்திலேயே தனது மெலடி இசையால் ரசிகர்களைக் கவர்ந்தது மட்டுமின்றி, விருதுகளையும் வென்றார். அதன்பின் மஜ்னு, சாமுராய், லேசா லேசா, கஜினி, காக்க காக்க, அந்நியன், பீமா, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார்.
தமிழில் மெலடி ஹிட்ஸ் ஆல்பத்தை எடுத்துப் பார்த்தால், அதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் தான் அதிகமாக இருக்கும். இதனாலேயே திரையுலகில் ‘தி மெலடி கிங்’ என அழைக்கப்படுகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தனது சிறப்பான இசைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது, ரோட்டரி சங்கத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது, ரிட்சு குழுமத்தின் மேஸ்ட்ரோ விருது மற்றும் பல விருதுகளை ஹாரிஸ் ஜெயராஜ் பெற்றுள்ளார். ஏ.ஆர். ரகுமான் மற்றும் வித்யாசாகர் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஒருவருக்கு இருப்பதிலேயே மிகவும் மோசமான கெட்ட பழக்கம் கடன் வாங்குவது தான் என சமீபத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “உலகில் கெட்டப் பழக்கம் இல்லாத மனிதர்களை பார்ப்பது அரிது. இருப்பினும் மோசமான கெட்டப் பழக்கம் எதுவென்றால் அது கடன் வாங்குவது தான். குடிப்பழக்கம் இருந்தால் கூட அது தனிநபரைத் தான் அதிகமாக பாதிக்கும்.
ஆனால் நீங்கள் வாங்கும் கடன், உங்களை மட்டுமின்றி குடும்பத்தையே பாதிக்கக் கூடும். ஆனால் கடன் வாங்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது இங்கு யாருக்குமே தெரியவில்லை. கடன் வாங்குவதைத் தவிர்த்தாலே உங்கள் குடும்பம் நிம்மதியாக இருக்கும்.” என ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.
வளர்ந்து வரும் பொருளாதார உலகில் கடன் வாங்குவது மிக எளிதான நடைமுறையாக மாறி விட்டது. வருங்கால செலவுகளுக்கு முன்னேற்பாட்டுடன் செயல்பட முடியாததே கடன் வாங்குவதற்கு முக்கிய காரணம்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சொல்வது போல், கடன் வாங்குதல் மிக மோசமான கெட்டப் பழக்கம் தான். ஆனால், இன்னும் இதனை உணராத நபர்கள் பலர் உள்ளனர். அவசர காலங்களில் வேறு வழியின்றி கடன் வாங்கினாலும், உரிய காலத்திற்குள் அதனை திருப்பிச் செலுத்தி விட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் அது தாமதமாகும் போது தான் பல பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.