பூச்சொரிதல் விழா தொடங்கியது: 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன்…!

12 hours ago
ARTICLE AD BOX

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். இந்தக் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சித்திரை மாதம் நடைபெறும் தேரோட்டம் சிறப்பு வாய்ந்ததாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து வழிபட்டு செல்வார்கள். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு பூச்சொரிதல் விழா மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று(09-03-2025) தொடங்கியது. மும்மூர்த்திகளை நோக்கி மாய சூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எல்லா விதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி சமயபுரம் மாரிஅம்மன் பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்பாகும். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று தொடங்கி அடுத்த மாதம் 6ம் தேதி வரை 28 நாட்கள் அம்மன் பச்சை பட்டினி விரதம் இருப்பார். இந்த 28 நாட்களும் கோவிலில் உள்ள அம்மனுக்கு தளிகை நெய் வேத்தியம் கிடையாது. பூச்சொரிதல் விழாவையொட்டி இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் அம்மனுக்கு காப்பு கட்டுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா தொடங்கியது. முதல் வார பூச்சொரிதல் விழாவான இன்று கோவில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழுத் தலைவர் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில அறங்காவலர்கள் பி.பிச்சைமணி, ராஜசுகந்தி, சே.லெட்சுமணன் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் யானையின் மீது பூத்தட்டுகளை வைத்தும், கையில் ஏந்தியும் தேரோடும் வீதியில் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பூக்களை சாற்றினார்கள். இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பூச்சொரிதல் விழா தொடங்கியதால் சமயபுரம் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விழா கோலம் பூண்டுள்ளது. பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு காவல் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

The post பூச்சொரிதல் விழா தொடங்கியது: 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன்…! appeared first on Rockfort Times.

Read Entire Article